27 5 2022
ரஷ்யாவை ஒருபோதும் தனிமைப்படுத்த முடியாது: புதின்
உலகம் நவீனமயமாகிவிட்ட நிலையில் ரஷ்யாவை ஒருபோதும் தனிமைப்படுத்த முடியாது என்று அந்நாட்டின் அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் கூட்டமைப்பாக கருதப்படும் யூரேசியா மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக புதின் உரையாற்றினார். ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் பேசிய புதின், ரஷ்யாவை தனிமைப்படுத்த முயன்றவர்கள் தற்போது தங்களுக்கே கேடு விளைவித்துக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். இந்த நாடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் பணவீக்கம் அதிகரித்திருப்பதாகவும், வேலைவாய்ப்பின்மை உயர்ந்திருப்பதாகவும், வினியோக சங்கிலி உடைபட்டிருப்பதாகவும் புடின் கூறினார்.
உக்ரைனுக்கு எதிராக கடந்த பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா தொடங்கிய போர் காரணமாக சர்வதேச அளவில் உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதேபோல், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி தொலைபேசியில் பேசி உள்ளார். அப்போது, அரசியல் நோக்கோடு ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுமானால், உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா தயார் என்று அவர் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, ரஷ்யாவின் தாக்குதல் குறித்து பேசிய உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி, உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யா இன அழிப்பை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். அதேநேரத்தில், ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி அடிப்பதற்கான முயற்சியில் உக்ரைன் தீவிரமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யாவுக்கு ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வரும் அமெரிக்கா, தனது ராணுவத்தை உக்ரைனுக்கு அனுப்ப மறுத்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிடுவதற்கு அமெரிக்க ராணுவம் உக்ரைனுக்கு அனுப்பிவைக்கப்பட மாட்டாது எனும் கொள்கையில் மாற்றம் இல்லை என்று அமெரிக்க பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிப்ரி தெரிவித்துள்ளார்.