வியாழன், 13 அக்டோபர், 2022

மொழிப் போர் வெடிக்கும்.. மத்திய அரசை எச்சரித்த மு.க. ஸ்டாலின்!

 13 10 2022

மொழிப் போர் வெடிக்கும்.. மத்திய பா.ஜ.க., அரசை எச்சரித்த மு.க. ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “மத்திய பாஜக அரசுக்கு கடந்த காலங்களில் தமிழ் நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களை நினைவூட்டியுள்ளார்.

முன்னதாக மு.க. ஸ்டாலின் 2018இல் திமுகவின் செயல் தலைவராக இருந்த போதும், தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக 1965இல் நடந்த மாதிரி போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தார்.

1965இல் என்ன நடந்தது?

இந்த ஆண்டு திராவிட இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய ஆண்டாகும். 1963 ஆம் ஆண்டில், பிரதமர் ஜவஹர்லால் நேரு அலுவல் மொழிகள் மசோதாவை முன்வைத்தார்.
இது 1965 ஆம் ஆண்டில் நாட்டின் அலுவல் மொழியாக இந்தியை உருவாக்கும் ஆண்டாக அமைத்தது.

அப்போது, திராவிட இயக்கத்தின் அரசியல் வாரிசாக இருந்த தி.மு.க. இந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டத்தின் 17வது அத்தியாயத்தின் நகல்களை கட்சி தொண்டர்கள் எரிப்பார்கள் என்று அறிவித்தது,

அதைத் தொடர்ந்து திமுக தலைவர் சி என் அண்ணாதுரை கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். எதிர்ப்பு வலுத்ததால், 1964 ஜனவரி 25 அன்று, இந்தி திணிப்பை எதிர்த்து, 27 வயதான சின்னசாமி என்ற தி.மு.க தொண்டர் தீக்குளித்தார்.
எனினும், மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்து, ஜனவரி 26, 1965 முதல் இந்தி இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக மாறும் என்று அறிவித்தது.

இதற்கு முந்தைய நாள், ஜனவரி 25, 1965 அன்று, அண்ணாதுரை உட்பட மூத்த திமுக தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து ஹிந்தியை நீக்கக் கோரி சென்னை மாகாணத்தில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 50,000 மாணவர்கள் தலைமை செயலகம் நோக்கி பேரணி சென்று, அப்போதைய முதலமைச்சர் பக்தவச்சலத்திடம் அனு அளித்தனர்.

ஜனவரி 26ஆம் தேதி, அதிகாலையில், மு. கருணாநிதி மற்றும் பல திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டபோதும், திமுக உறுப்பினர் டிஎம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யன்பாளையம் வீரப்பன் மற்றும் ராமசுந்தரம் முத்து ஆகியோர் தங்களது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தனர்.
தொடர்ந்து, கீரனூர் முத்து, விராலிமலை சண்முகம் மற்றும் பீளமேடு தண்டபாணி ஆகியோர் விஷம் குடித்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்களான சி.சுப்பிரமணியம் மற்றும் ஓ.வி.அழகேசன் ஆகியோர் பதவி விலகப் போவதாக மிரட்டியதை அடுத்து, 1964ல் நேருவுக்குப் பின் வந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, இந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும், ஆங்கிலம் தொடரும் என்றும் பகிரங்க உறுதிமொழி அளித்தார்.

தொடர்ந்து, பிப்ரவரி 1965 இல், காங்கிரஸ் காரியக் கமிட்டி பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, மேலும் இந்தி பேசாத மக்களின் அச்சத்தை நிவர்த்தி செய்ய அலுவல் மொழிச் சட்டம், 1963 இல் திருத்தம் கோரியது.
இதனை, இந்தித் திணிப்புக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றி என திராவிட இயக்கங்கள் கொண்டாடின. பின்னர், அரசியல் ரீதியாக, தமிழ்நாட்டில் காங்கிரஸின் தாக்கம் பேரழிவு தரக்கூடியதாக இருந்தது

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இழந்த மண்ணை காங்கிரஸால் ஒருபோதும் மீட்டெடுக்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின், 1967இல், நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று, அன்றிலிருந்து, திராவிடக் கட்சிகள் தனித்து ஆட்சியில் உள்ளன.
தல்வர் அண்ணாதுரையின் அரசு, மதராஸ் மாநிலத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்தது.

தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு வரலாற்று, கலாச்சார சூழல்

தமிழ்நாட்டின் சமூக நீதி அரசியல், ஆரம்பத்தில் தேச உணர்வு இல்லாதது, காங்கிரஸ் தலைமையிலான தேசிய இயக்கம் மற்றும் கம்யூனிஸ்டுகள் இரண்டிலிருந்தும் தன்னை வேறுபடுத்திக் கொள்ள தமிழ் மற்றும் திராவிட மொழி மற்றும் இன அடையாளங்களை முன்னிறுத்தியது.
1937-39 இன் முந்தைய இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான், 1936ல் காங்கிரஸிடம் மாகாணத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, பெரியார் ஈ.வி. ராமசாமியையும் அவரது ஆதரவாளர்களையும் அரசியல் இடத்தை மீட்டெடுக்க அனுமதித்தது.

சி ராஜகோபாலாச்சாரியின் அரசாங்கம், சென்னை மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஹிந்தியை அறிமுகப்படுத்தியது. பெரியார் தலைமையிலான இந்தி எதிர்ப்புப் போராட்டம், இந்திய தேசிய அரசிலிருந்து சுதந்திரமான தமிழ் திராவிட தேசம் என்பதை வலியுறுத்தியது.
தமிழுக்கும் இந்திக்கும் எதிரான வாதமும் தடையின்றி திராவிடம் மற்றும் ஆரியம் என்ற விவாதத்தில் சேர்ந்தது. 1980 களில் இலங்கைத் தமிழர்களுக்கான குரல் தொடங்கி சமீபத்திய ஜல்லிக்கட்டு வரை இது தொடர்ந்தது.

ஏன் இந்த பழைய பதற்றம் மீண்டும் எழுந்தது?

2014க்குப் பிந்தைய பிஜேபியின் எழுச்சி இந்தி-இந்து-இந்துத்துவா இந்தியா என்ற சூழலை உருவாக்கியுள்ளது. இது நாட்டின் தென்மாநிலங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில், இந்தி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அரசியல் கட்சிகளுக்கு தொண்டர்களை அணிதிரட்டவும், அவர்களின் செயல்திறனில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பவும் நீண்ட காலமாக பயன்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, தமிழக அரசியலில் மத்திய அரசு மற்றும் பாஜகவின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது. உள்ளூர் அமைப்புகள் அரசியல் இயக்கத்தில் சாத்தியமான மாற்றத்தை உணர்கின்றன.
தற்போது தமிழ்நாட்டின் மேலாதிக்கப் பிராந்தியக் கட்சி என்ற நிலைப்பாட்டை திமுக மீண்டும் நிலைநிறுத்த முற்படுகிறது. தொடர்ந்து, 1965ஆம் ஆண்டு போல் தமிழர் பாதுகாவலர் ஆக முயற்சிக்கிறது.


source https://tamil.indianexpress.com/explained/as-stalin-warns-centre-recalling-the-anti-hindi-agitations-in-the-past-in-tamil-nadu-524607/