2 10 2022
இந்தியாவில் இன்னும் மனுதர்ம ஆட்சியே நடைபெறுவதாகவும், அதனால் தான் ஆணவப் படுகொலைகள் தொடர்வதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாள் மணி விழாவையொட்டி தமிழ் ஸ்டுடியோஸ் சார்பில் சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் எனும் தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழாவின் பரிசளிப்பு நிகழ்வு நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், நடிகர்கள் இளவரசு, திரைப்படக் கல்லூரியின் முதல்வர் ராஜேஷ், இயக்குனர் ராசி அழகப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்த குறும்பட, ஆவணப்பட கலைத் திருவிழாவில் போட்டிக்கு வந்த 200 படங்களில் முதல் சுற்றில் 38 படங்கள் தேர்வு செய்யப்பட்டது. சமத்துவம் என்ற தலைப்பில் போட்டி அமைந்துள்ளதால் முதல் பரிசு இரண்டாம் பரிசு என்று வரிசை படுத்தாமல் சிறந்த 10 படங்களுக்கு தலா 20,000 ரூபாய் என மொத்தம் இரண்டு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ”இந்தியாவுக்கான 4 தூண்களும், அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளாமான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவமே இன்று கேள்விக்குறியாகி உள்ளது. கற்பி, புரட்சி செய், ஒன்று சேர் என்ற அம்பேத்கரின் வரிகள் பிரபலமானவை. அதை கற்பி, கலகம் செய், ஒன்று சேர் என்று மாற்றியுள்ளேன்.
சமத்துவக் கருத்தை கற்பிக்க வேண்டும்; கேள்வி எழுப்பும் துணிச்சல் வேண்டும்;
அதுவே மக்கள் எழுச்சி; சாதம் என்பது வடமொழி; சோறு என்பது தான் நல்ல தமிழ்ச்சொல் ; நல்ல தமிழ்ச்சொற்கள் வேண்டுமென்றால் சேரிக்கு தான் செல்ல வேண்டும். சொல் என்பதும் செயல் தான்; வெறும் பேச்சல்ல. சொற்கள் தான் மனிதர்களை இயக்குகிறது; சொற்கள் தான் சாதனை படைக்கிறது; சொற்களே வலிமைமிக்கவை; சொற்களை தேர்வு செய்து கையாள வேண்டும். Leader என்றால் தலைவனல்ல; முன்னோடி; முன்னோக்கி செல்பவனே Leader. மனிதநேயம் இல்லாதவர்களிடம் சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. பாசிசத்துக்கு எதிரானதே ஜனநாயகம்; ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகிய மூன்று தான் மனிதகுலத்தின் பகைசக்திகள்; இந்திய சமூக கட்டமைப்பில் வர்ணாசிரம தத்துவம், சகோதரத்துவத்தை சிதைத்துள்ளது.
சாதிய பிரச்சனை என்பது தலித்துகளுக்கும், தலித் அல்லாத மக்களுக்கும் இடையேயான பிரச்சனை அல்ல. பார்ப்பனர்களுக்கிடையேயும் சமத்துவமின்மை நிலவுகிறது. 50 சாதிகள் பார்ப்பனர்களிடத்தில் உள்ளது. கருத்தியல் பகையே சனாதனம். அம்பேத்கரும், பெரியாரும் மாமனிதர்கள்; அவர்களை யாரோடும் ஒப்பிட முடியாது; சராசரி மனிதர்கள் வியப்படையும் வகையில் இருவரும் வாழ்ந்துள்ளனர். பார்ப்பன சகோதரர்கள் ஆடு, மாடு மேய்த்துளனரா? விவசாயம் செய்துள்ளனரா? நகை செய்துள்ளனரா? மூட்டை சுமந்துள்ளனரா? நான் பார்ப்பனர்களை வெறுக்கவில்லை; வெறுப்பு அரசியல் செய்யவில்லை; விளக்க அரசியல் செய்கிறேன். இன்னும் மனுதர்மம் தான் ஆட்சி செய்கிறது ; அதனால் தான் ஆணவப்படுகொலைகள் தொடர்கிறது. வன்முறைகளின் மூலம் தான் ஒழுங்கு உருவாகிறது; மிகப்பெரிய வன்முறை பெண்கள் மீது நிகழ்ந்திருந்ததால் தான், பெண்கள் குடும்ப அமைப்புக்கு கட்டுப்பட்டு வாழ்கின்றனர்.
தனிமனித இனம், சுதந்திரத்தை பாதுகாப்பதே ஜனநாயகம்; குறும்படக் கலைஞர்கள், ஆவணப்படக் கலைஞர்களே புரட்சிக்கு வித்திடுவார்கள்; அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்; கருத்தியலைப் பரப்பும் தளமே குறும்படங்கள். நடிகர் தனுஷின் உடலால் 50 பேரையெல்லாம் அடிக்க முடியாது; அவரால் 50 பேரை அடிக்க முடியும் என்று காட்டுவதே உளவியல். பரியேறும் பெருமாள் படத்தில் ஏன் கதாநாயகன் தொடர்ந்து தன்னை சிறுமைப்படுத்திக்கொண்டே இருக்கிறான்? என்ற கேள்வி படத்தைப் பார்க்கும்போது எனக்குள் எழுந்தது; இதை இயக்குநர் மாரி செல்வராஜ் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். திரைப்படங்களை விட குறும்படங்கள் தான் சமூகவலைதளங்கள் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று திருமாவளவன் பேசினார்.
source https://news7tamil.live/india-is-still-ruled-by-manudharma-thol-thirumavalavan.html