ராகுல்காந்தியின் நடைபயணத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் இந்த பாத யாத்திரையை அவர் மேற்கொள்கிறார்.
வடக்கு நோக்கி ஒவ்வொரு மாநிலங்களாக காஷ்மீர் வரை இந்த பாத யாத்திரை தொடர்கிறது. கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தனது நடைபயணத்தை தொடங்கினார். தொடர்ந்து, கேரளாவில் 19 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டார்.
தமிழகம், கேரளாவை தொடர்ந்து ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்த 30-ந் தேதி கர்நாடகத்துக்குள் நுழைந்தது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் ராகுல்காந்திக்கு காங்கிரசார் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். இன்று (திங்கட்கிழமை) காலை மைசூருவில் இருந்து நடைபயணத்தில் தொடங்கி ஸ்ரீரங்கப்பட்டணா வழியாக மண்டியாவுக்கு செல்கிறார்.
ராகுல் காந்தியின் இந்த நடைபயணத்தில் ஒரு நாள் மட்டும் கலந்துகொள்ள சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் முடிவு செய்துள்ளனர். அதன்படி சோனியா மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை கர்நாடகா வருகிறார்கள். அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவுக்கு வரவுள்ளனர்.
வருகிற 6-ந் தேதி அவர்கள் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. சிறிது தூரம் அவர்கள் நடைபயணத்தில் பங்கேற்று நடப்பார்கள் என்று கூறப்படுகிறது. சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வருகையையொட்டி அவர்கள் தங்கவுள்ள விடுதி உள்பட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/sonia-priyanka-participating-in-rahuls-walk.html