செவ்வாய், 18 அக்டோபர், 2022

சட்டப்பேரவையில் ஓ.பி.எஸ் இருக்கை மாற்றம் இல்லை; அவையை புறக்கணித்த இ.பி.எஸ் தரப்பு

 

17 10 2022

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக ஆர்.பி. உதயகுமாருக்கு அளிக்காததால், எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வராமல் புறக்கணித்தனர்.

அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் நிலவி வருகிறது. இருவர் அணியும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாலராக உள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு சட்டப்பேரவையில், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க சார்பில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கான இருக்கையை ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்கக் கோரி சபாநாயகர் அப்பாவு இடம் கடிதம் அளிக்கப்பட்டது. அதே போல, ஓ. பன்னீர்செல்வம், தான்தான் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் தன்னைக் கலந்தாலோசிக்காமல் எந்த மாற்றங்களையும் செய்யக் கூடாது என்று சபாநாயகர் அப்பாவு இடம் கடிதம் அளித்தார். மேலும், சபாநாயாகர் எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடியது. சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக துணைத் தலைவர் நாற்காலியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்றார். அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் வழக்கமான இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.

அதே நேரத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஓ.பி.எஸ்-க்கு அளிக்கப்பட்டதால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க உறுப்பினர்கள் அவைக்கு வராமல் புறக்கணித்தனர்.

இன்று மதியம் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, செய்தியாளர்கள், சபாநாயகர் அப்பாவு இடம், ஓ. பன்னீர்செல்வத்தின் இரண்டு கடிதங்கள் உட்பட, சபாநாயகர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு கடிதங்கள் குறித்து கேட்டதற்கு, சட்டப்பேரவை நடக்கும்போது, அந்த பிரச்னையை பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்பது சரியல்ல என்று கூறினார்.

“சம்பந்தப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் சபையில் கேள்விகளை எழுப்பினால், அவர்களுக்கு சபையில் தகுந்த பதில் அளிக்கப்படும்” என்று அப்பாவு மேலும் கூறினார். சபையின் அலுவல் ஆலோசனைக் குழுவில் பன்னீர்செல்வம் எந்த அடிப்படையில் பங்கேற்றார் என்ற கேள்விக்கு, முன்னாள் முதல்வர் குழுவில் உறுப்பினராக இருந்ததால் அலுவல் குழு கூட்டத்தில் பங்கேற்றதாக அப்பாவு கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-assembly-session-no-change-in-seat-for-ops-in-house-eps-and-aiadmk-members-absent-526877/