திங்கள், 17 அக்டோபர், 2022

ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு தமிழக அரசுக்கு இல்லை – அமைச்சர் நாசர்

 17 10 2022

ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு தமிழக அரசுக்கு இல்லை என்றும் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றும் தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் போரக்ஸ் நகரில் கிழக்கு மாவட்ட திமுக
சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் பேசிய அவர், ”வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் சிறப்பான வெற்றி பெற பூத் கமிட்டி அமைக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் திமுக வெல்லும். திருவள்ளூர் தொகுதியில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல்வேறு பதவிகள், தலைவர் போட்ட பிச்சை. நீங்கள் உழைக்க வேண்டும். எங்கள் காலம் முடிந்து விட்டது. நீங்கள் பதவிக்கு வர வேண்டும்.

ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு தமிழக அரசுக்கு இல்லை. 15 மசோதாக்கள் தூங்கிக் கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான பணம் ஜிஎஸ்டியில் வரவில்லை. தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. கஜானா காலியாக இருந்தாலும் முதல்வர் தொடர்ந்து சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சராக இருக்கும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது” என்று கூறினார்.

source https://news7tamil.live/tamil-nadu-government-does-not-have-the-cooperation-of-the-union-government-minister-nasser.html