15 11 2022
அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்டோருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரி என்ற தமிழக அரசின் கொள்கை முடிவுபடி கடந்த அதிமுக ஆட்சியில், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் கட்ட அரசு ஒப்புதல் அளித்திருந்தது. மேலும் தேசிய மருத்துவ ஆணையத்தில் விதிகள் படி மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் அனுமதிக்கப்பட்ட பரப்பளவை விட குறைவாக அளவில் முறைகேடாக கட்டிடம் கட்டியதில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக திருவாரூரை சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 76 ஆயிரத்து 778 சதுர அடிகள் கட்டப்பட வேண்டிய மருத்துவ கல்லூரி 9 லட்சத்து 99 ஆயிரத்து 296 சதுர அடிகள் மட்டுமே கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும், கட்டுமான நிறுவனங்கள், அப்போது இருந்த அமைச்சர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் சேர்ந்து கூட்டாக இந்த ஊழலை செய்துள்ளதாவும், அப்போது பொதுப்பணித்துறையை கவனத்து வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் தேசிய மருத்துவ கவுன்சில் தலைவர் இந்த ஊழலில் பெரும் பங்கு உள்ளதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கடந்த ஆண்டு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், தனது புகாரை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று ராஜசேகரன் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அசாத் முகமது ஜின்னா, மனுதாரர் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தற்போது எதிர்கட்சி தலைவராக இருப்பதால், இது வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் கோரி தமிழக அரசுக்கு ஆவனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை தற்போது டிசம்பவர் 20-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
source https://tamil.indianexpress.com/tamilnadu/taminadu-government-action-against-eps-for-medical-college-scam-542302/