தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று முன்தினம் (ஜனவரி 09) தொடங்கியது. தமிழ்நாடு அரசு கொடுத்த ஆளுநர் உரையில் திராவிடநாடு, சமூகநீதி, அம்பேத்கர், அமைதிப்பூங்கா உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருந்த பகுதியை தவிர்த்தும் சிலவற்றை சேர்த்தும் ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையில் படித்ததால் சட்டப்பேரவையில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதையடுத்து, மு.க. ஸ்டாலின், ஆளுநர் படித்த உரையைத் தவிர்த்து தமிழ்நாடு அரசு அச்சிட்டு விநியோகித்த ஆளுநர் உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இப்படி இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தின் முதல் நாள் கூட்டம் களேபரமாக முடிந்தது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தின் 3வது நாளான இன்று (ஜனவரி 11) ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சட்டப்பேரவைக்கு கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர்.
மதிநுட்பத்துடன் செயல்பட்டு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பாற்றிய முதல்வருக்கு பாராட்டு
ஆளுநர் உரைக்குப் பிறகு, முதலமைச்சரை பேச அனுமதித்தது விதிமீறல் என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து பேசிய சபாநாய்கர் அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தபோது, ஏற்பட்ட அசாதாரண சூழலை முதல்வர் சரியாக கையாண்டு மதிநுட்பத்துடன் செயல்பட்டு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பாற்றியுள்ளார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: “ஆளுநர் உரையில் பல குளறுபடிகள் இருந்தன. உரையை வசிப்பது மட்டும்தான் ஆளுநரின் கடமை. உரையில் உள்ள வரிகளுக்கு அரசுதான் பொறுப்பு. ஆனால் ஆளுநர் உரையை மாற்றிப் படித்ததால், அவையில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. அப்போது முதல்வர் மதிநுட்பத்துடன் செயல்பட்டார். அவையில் இருப்பவர்களை அமைதிபடுத்தினார். விதி எண் 17 ஐ தளர்த்தி ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டதை பதிவு செய்யுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரி சட்டமன்றத்தின் மாண்பை பாதுகாத்தார். அவருக்கு நன்றி. பிற மாநிலங்களுக்கு ஓர் முன்மாதிரியான சட்டமன்றமாகவும் தமிழகம் திகழ்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, பிற மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய வகையில் செயல்பட்ட முதல்வரின் செயல்பாடு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
ஆளுநரின் உரை தொடர்பான தீர்மானம் இந்திய அளவில் பேசப்படுகிறது. ஆளுநரின் உரிமை என்ன என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் அமைந்ந்துள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில், கேள்வி நேரம் முடிந்த பிறகு எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
அப்போது, குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அரசு மீது குற்றச்சாட்டு வைக்கும் போது எதன் அடிப்படையில் என குறிப்பிட வேண்டும். சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என்றால், எந்த சம்பவம் என குறிப்பிட்டு சொல்லுங்கள் என்று கூறினார்.
இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “எடுத்த எடுப்பிலேயே எதிர்கட்சித் தலைவர் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய்விட்டது என பேசுகிறார். அவர் பேசுவதற்கு அனுமதி அளியுங்கள். நான் அதற்கு பதிலளிக்கிறேன். அவர் ஆட்சியில் என்ன நடந்தது என்ற பட்டியல் உள்ளது. அவருடைய ஆட்சிக் காலத்தில் சட்டம் – ஒழுங்கு எவ்வளவு சீரழிந்தது என்பதை நான் ஆதாரத்தோடு விளக்குகிறேன். அவர் பேசுவார் எனில், நானும் பேச தயார்” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தினம்தோறும் வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. சென்னை விருகம்பாக்கத்தில் தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண்காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
இ.பி.எஸ் பேசும்போது, குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது என்று கூறினார்.
அவருக்கு பேச அனுமதி கொடுங்கள் என முதலமைச்சர் தெரிவிக்க, ஆளும் கட்சி அனுமதி அளித்தால் தான் பேச அனுமதிக்கிறீர்கள் என சபாநாயகர் அப்பாவு மீது எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
இ.பி.எஸ்-சின் இந்த குற்றச்சாட்டும்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இவ்வாறு சபாநாயகரை குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கது. இது மரபு அல்ல என்று கூறினார்.
அப்போது, சபாநாயகர் அப்பாவு, அவர்கள் இந்த பிரச்சனை குறித்து பேசுவதாக தெரிவிக்கவில்லை என்று கூறினார்.
இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அவருக்கு பேச அனுமதி கொடுங்கள். பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். நான் ஓடி ஒளியமாட்டேன்” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசியதாவது: “காவல்துறைக்கே பாதுக்காப்பு இல்லாதது வேதனைக்கு உரியது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என எடப்பாடி பழனிசாமி என கேள்வி எழுப்பினார். இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துப் பேசினார். ஆனாலும், முழுமையாக பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அ.தி.மு.க-வினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்த வேங்கைவயல் கிராமத்தில் தலித் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் கடந்த டிசம்பர் மாதம் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி.விஜயபாஸ்கர், ஜி.கே. மணி உள்ளிட்டோர் இன்று பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சாதிக் கொடுமையை சான்றோர்களே தவறு என்று உணரச் செய்து தனது கல்வியால் சட்டமும் கல்வியும் கற்றுத் தேர்ந்தவர் மாமேதை அம்பேத்கர். அத்தகைய மாமேதை பிறந்த மண்ணில் சாதிய பாகுபாடு தீண்டாமை அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பதை புதுக்கோட்டை மாவட்டம் வேங்கவயல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது, கண்டிக்கத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகளை போட்டு அசுத்தம் செய்தது தொடர்பாக இங்கே பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி, இந்த அரசினுடைய கவனத்திற்குக் கொண்டுவந்து உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென்று ஒட்டுமொத்தமாக உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக, அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள, தொடர்ந்து மேற்கொள்ளப்பட இருக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இந்த அவையிலே நான் பதிவுசெய்ய விரும்புகிறேன். எல்லோருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் சமூக நீதி. அனைவருக்கும் சமமான பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளும், வாய்ப்புகளும் அமைய வேண்டும் என்ற எண்ணம்தான் சமூக நீதி. அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் என்பதை உறுதி செய்வதன் மூலமாகத்தான் அத்தகைய சமூக நீதியை நாம் வழங்கிட முடியும்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் சமூக நீதி என்னும் அசைக்க முடியாத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதை உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். சாதிக் கொடுமையை, சான்றோர்களே தவறு என்று உணர்ந்து கொள்ளச் செய்து, தன் ஓங்கி உலகளந்த கல்வியால், சட்டமும், பொருளாதாரமும் கற்றுத் தேர்ந்தவர் மாமேதை டாக்டர் அம்பேத்கர். அத்தகைய மாமேதை பிறந்த இந்த மண்ணில், சாதியப் பாகுபாடு சார்ந்த தீண்டாமை இன்னும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பதை, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்வு உண்மையிலேயே வருத்தத்திற்குரியது; கண்டனத்திற்குரியது; கண்டிக்கத்தக்கது.” என்று கூறினார்.
ஆளுநரின் விருந்தினர் மீது உரிமை மீறல் தீர்மானம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று (ஜன.11) பேசிய தி.மு.க எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, ஆளுநர் உரையின்போது ஆளுநரின் விருந்தினர் சபை மாடத்தில் இருந்து செல்போனில் வீடியோ எடுத்தார் என்று தெரிவித்து, ஆளுநரின் விருந்தினர் மீது சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இது தொடர்பாக பேசிய சபாநாயகர் அப்பாவு, இதில் உரிமை மீறலுக்கான காரணம் இருப்பதால் தீர்மானத்தை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக தெரிவித்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி கலந்த வருத்தம்
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஆளுநர் உரைக்கு நன்றியுடன் வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்று பேரவையில் தி.மு.க எம்.எல்.ஏ கம்பம் ராமகிருஷ்ணன் தீர்மானம் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் பெற்ற உரையின் சில பகுதிகளை இணைத்தும் விடுத்தும் ஆளுநர் உரையாற்றியமைக்கு பேரவை தனது வருத்தத்தை பதிவு செய்கிறது என்று தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார். தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-assembly-highlights-speaker-praise-cm-and-thanks-and-sorry-to-governor-574940/