கமலின் கூட்டணி அழைப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இணைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் திமுகவுடன் கூட்டணி பேச்சு நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் தலைவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலையும் கமல் சந்தித்து பேசியுள்ளார்.
இதனிடையே கமலின் கூட்டணி அழைப்பை நிராகரித்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உறுதி செய்துள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி அமைக்க உள்ளதால், நண்பர்களாக இருப்போம் என தெரிவித்து விட்டதாகவும் கூறினார்
source: ns7.tv