5 1 2023
தமிழ்நாடு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ட்விட்டரில் #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தமிழ்நாடு என்று கூறுவதைவிட தமிழகம் என்று கூறுவதே சரியானது என்று தெரிவித்தார். இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பெற்றது.
ஆளுநரின் சர்ச்சை பேச்சுக்கு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “#தமிழ்நாடு வெறும் பெயரல்ல. புவியியல் -மொழியியல் – அரசியல் – பண்பாட்டின் தனித்துவ அடையாளம். பெரும் போராட்டத்திற்கு பிறகு தமிழ் நிலத்திற்கு பெயர் சூட்டினார், கழகம் தந்த அண்ணா. அவர் வழியிலும், முத்தமிழறிஞர் வழியிலும் தமிழ்நாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழகம் அரணாக காத்து நிற்கும்!” என்று பதிவிட்டுள்ளார்.
திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு – தமிழன் – தமிழ் என்பவை கசப்பானவையாக இருந்தால் அவற்றை விட்டு ஆளுநர் விலகவேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி, ”நம் மொழி – பண்பாடு – அரசியல் – வாழ்வியலின் அடையாளம் “தமிழ்நாடு”. அப்பெயரை சட்டமன்றத்தில் சட்டமியற்றி, பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது என்றும் தமிழ்நாடு தான்! #தமிழ்நாடு” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ”பிள்ளைக்கு பெயர் சூட்ட பெற்றவர்களுக்கு தெரியாதா? தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பிகள் அண்ணாவின் தலைமையில் 1968 ஜூலை 18ல் தமிழ்நாடு என பெயர் சூட்டும் சட்டத்தை சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றினர். தமிழ்நாடு என்ற பெயரை அழிக்க நினைக்கும் பாஜக தமிழ்நாட்டில் வேரோடு அழிந்தே தீரும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனக் குரலை எழுப்பி வரும் நிலையில், ஆளுநருக்கு எதிராக இணையவாசிகள் #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக்கை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
source https://news7tamil.live/controversy-on-tamil-nadu-tamilnadu-is-trending-on-twitter-against-the-governor.html