10 1 2023
ப. சிதம்பரம்
பணமதிப்பிழப்பு தொடர்பான சட்டப் போராட்டத்தில் மத்திய அரசு வெற்றி பெற்றது என்பதில் சந்தேகம் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் 4:1 தீர்ப்பின் மூலம் ,பண மதிப்பீட்டு நீக்க நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அனைத்து வாதங்களையும் நிராகரித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து மக்களையும் கட்டுப்படுத்தும். மாறுபட்ட கருத்து சொன்ன ஒரு நீதிபதியின் தீர்ப்பு எதிர்கால மாறுபட்ட தீர்ப்புகளுக்கு வித்திடும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
சட்டப் பரிமாணம்
இந்த வழக்கில் நீதிமன்றத்தின் ஆறு கேள்விகள் தொடர்பாக தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளது ?
- ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 26, துணைப் பிரிவு (2) ன் கீழ் எந்த முகமதிப்புள்ள நோட்டு வரிசைகளை செல்லாது என அறிவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது.
- பிரிவு 26, துணைப் பிரிவு (2) செல்லுபடியாகும். ஒப்படைப்பு அதிகாரத்தை அரசு அதிகமாக பயன்படுத்தியதாக ரத்து செய்ய முடியாது.
- பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவில் எந்தக் குறைபாடும் இல்லை.
- பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இரண்டு உரிமைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நீதிமன்றம் எதை ஆதரிக்க வேண்டுமோ அதை ஆதரித்துள்ளது.
- செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை மாற்றுவதற்கு வழங்கப்பட்ட காலம் நியாயமானது.
- அரசின் காலக்கெடுவிற்கு அப்பால் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளை ஏற்க ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை.
இந்த வழக்கில் நுணுக்கமான கேள்விகள் தவிர 1 மற்றும் 3 ம் கேள்விகள் மட்டுமே வாசகர்களுக்கு ஆர்வமாக இருக்கும். பணமதிப்பு நீக்கம் செய்வதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. அதே நேரத்தில் அதற்கு ரிசர்வ் வங்கியின் பரிந்துரை இருந்தால் அது பாராளுமன்றத்தின் அதிகாரத்துக்கு சமமானது. இதில் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், முடிவுகளை மத்திய அமைச்சரவையும் பரிசீலித்ததாக நீதிமன்றம் கூறியது.
உச்ச நீதிமன்றத்தின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கங்கள் வாசகருக்கு ஆர்வமூட்டக்கூடிய வகையில் இருக்கும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கங்கள் எட்டப்பட்டதா இல்லையா என்ற கேள்விக்குள் செல்ல தனக்கு நிபுணத்துவம் இல்லை என்று நீதிமன்றம் கூறி விட்டது. இந்த முடிவால் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து நீதிமன்றம் பதில் கூறி உள்ளது. சில பிரிவு குடிமக்கள் கஷ்டங்களை அனுபவித்ததால் எடுத்த முடிவே சரியில்லை என்று கூற சட்டம் இடம் தராது என கூறி விட்டது. இதனால், சட்ட சிக்கல்கள் அரசுக்கு சாதகமாக முடிவடைந்தன.
அரசியல் பரிமாணம்
சட்டக் கேள்விகளுக்கான பதில்கள் அந்த வழக்கை வாதங்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம், ஆனால் மற்ற இரண்டு பரிமாணங்கள் தொடர்பான வாதங்கள் வித்தியாசமானவை. இதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் , தி இந்து மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவற்றின் தலையங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இரண்டு சந்தர்ப்பங்களில் அதாவது 1946 மற்றும் 1978 -ம் ஆண்டுகளில், உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் ஒரு அவசரச் சட்டம் மூலம் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டன. அது பாராளுமன்றம் கொண்டு வரப்பட்டு விவாதத்துக்கு உட்பட்டு சட்டமாக மாற்றப்பட்டது. இது முழுமையான சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் பாராளுமன்ற இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி இயற்றப் பட்டது. அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் பணமதிப்பு நீக்கத்தை ஆதரிக்க மறுத்துவிட்டார். எனவே, நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. நல்லதோ கெட்டதோ, மக்கள் படும் இன்னல்களுக்கான பொறுப்பு சட்டத்தை இயற்றிய நாடாளுமன்றத்தையே சாரும் என்பது அன்றைய நிலையாக இருந்தது. பாராளுமன்றத்தில் ஒரு விவாதம் நடைபெற்று, அதன் அனைத்து அம்சங்களும் மக்கள் பிரதிநிதிகளால் பரிசீலிக்கப்பட்டு பிறகே எந்த முடிவுக்கும் ஒப்புதல் தரப்பட்டது.
இதைப்போலவே நவம்பர் 8, 2016 அன்று எடுக்கப்பட்ட முடிவு குறித்து நாம் கூற முடியுமா? இந்த முடிவில் நாடாளுமன்றத்துக்கு எந்த பங்கும் இல்லை. தர்க்கரீதியாக, நோக்கங்கள் தோல்வியடைந்ததற்கு அல்லது பொருளாதார விளைவுகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை குறை கூற முடியாது. 2016ல் புழக்கத்தில் இருந்த ரொக்கம் ரூ.17.2 லட்சம் கோடியிலிருந்து 2022ல் ரூ.32 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ‘கருப்புப் பணம்’ (அல்லது கணக்கில் வராத பணம்) வருமான வரித் துறை அல்லது புலனாய்வு அமைப்புகளால் அடிக்கடி கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இது எண்ண முடியாத அளவில் அடிக்கடி நடக்கிறது. புதிய ரூபாய் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் உட்பட கள்ள நோட்டுகளை தினசரி பிடிபடுவதாக செய்திகள் வருகின்றன.
பயங்கரவாதம்
பயங்கரவாதிகள் அப்பாவி குடிமக்களைக் கொல்வது மற்றும் பயங்கரவாதிகள் கொல்லப்படுவது அடிக்கடி நடக்கிறது. செய்திகளும் வாரம் தவறாமல் வருகின்றன. பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது தடையின்றி நடக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு காரணம் என்று அரசு அறிவித்தவற்றில் எந்த நோக்கமாவது நிறைவேறியிருக்கிறதா? இல்லை. இந்த விவகாரங்களை நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும்.
மிக முக்கியமான மற்றொரு கேள்வி உள்ளது. அரசாங்கத்தின் ஒப்படைப்பு நிர்வாக அதிகாரம் பாராளுமன்றத்தின் முழுமையான சட்டம் இயற்றும் அதிகாரத்திற்கு சமமாக இருக்க முடியுமா? ரிசர்வ் வங்கி சட்டம், பிரிவு 26, துணைப்பிரிவு (2) வழக்கில், கேள்வி அரசுக்கு சாதகமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மற்ற சட்டங்கள் தொடர்பாக கேள்வி எழுந்தால் பதில் ஒரே மாதிரியாக இருக்குமா? இந்த முக்கியமான கேள்வியை விவாதிக்க பாராளுமன்றம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
பொருளாதார பரிமாணம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ஆழமாக விவாதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த நடவடிக்கை புத்திசாலித்தனமானதா, மக்கள் துயருற்றார்களா,ல் நடவடிக்கை நேர்விகிதத்தில் இருந்ததா என்ற அல்லது பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளின் பொருளுக்கு பொருளாதார விளைவுகள் மற்றும் கஷ்டங்கள் விகிதாசாரமாக உள்ளனவா என்பதில் கூட நீதிமன்றம் புகவில்லை. இது தொடர்பாக சரியான முடிவை அரசே எடுத்துக் கொள்ளட்டும் என்று சொல்லிவிட்டது.
இருப்பினும், மக்களைப் பொறுத்த வரையில் இந்த முடிவு சரிதானா, நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகள், 30 கோடி தினசரி ஊதியம் பெறுபவர்கள், MSME கள் மற்றும் விவசாயிகள் அனுபவிக்கும் பொருளாதார கஷ்டங்கள் போன்றவை தாங்கிக் கொள்ளக் கூடியவை தானா என்ற கேள்விகளுக்கு விடை இல்லை. விவசாய விளைபொருட்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், 2016-17 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குப் பிறகு (பணமதிப்பு நீக்கம் நடைபெற்ற போது), 2017-18, 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுகளில் ஆண்டு ஜிடிபி வளர்ச்சி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வந்தது. பின்னர், தொற்றுநோய் பெருகியது. மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கினர். இந்த பிரச்சனைகளை மக்கள் தொடர்ந்து விவாதிப்பார்கள்.
பணமதிப்பு நீக்கம் தொடர்பான சட்ட வாதத்தில், அரசு முழு வெற்றி பெற்றது. ஆனால் அரசியல் வாதத்தின் விவாதம் இன்னும் முடிவடையவில்லை, நாடாளுமன்றம் இதை விவாதிக்க வேண்டும். பொருளாதார நோக்கில் பார்த்தால் அரசு இதில் நீண்ட நாட்களுக்கு முன்பே தோற்று விட்டது. ஆனால் அரசு இதை ஒப்புக் கொள்ளாது என்பதே நிதர்சனம்.
தமிழில் : த. வளவன்
source https://tamil.indianexpress.com/opinion/p-chidambaram-writes-demonetisation-three-dimensions-in-india-574296/