9 1 2023
தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்காமல் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியே சென்றது அநாகரீகமான செயல் என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த களேபரங்களால், தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுநர் ஆர் என் ரவி, அவையை விட்டு பாதியிலேயே வெளியேறினார். ஆளுநரின் இந்த செயல்பாடு குறித்து சட்டப்பேரவையின் முதல்நாள் நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் பேரவைக்கு வெளியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு உரிய அழைப்பிதழ் வழங்கப்பட்டு, உரைக்கான ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. ஒப்புதல் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே கருத்து மோதல் இருந்தாலும், அவர் பேரவைக்கு வந்த பொழுது அவருக்கான முழு மரியாதை அளித்தோம். ஆனால் அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு மாறாக, ஆளுநர் உரையை வாசித்திருப்பது உண்மையிலேயே வருத்தமளிப்பதாகவும், சமூகநீதி, சமத்துவம், பெண்ணடிமை உள்ளிட்ட வார்த்தைகளை அவர் பேச மறுத்துவிட்டதாகவும், தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.
சனாதான கொள்கைகளை சட்டப்பேரவைக்கு கொண்டு வருவது ஏற்புடையது அல்ல எனவும், ஆளுநரோடு அதிமுகவும் தேசிய கீதத்தை புறக்கணித்திருப்பது, அவமானமானது எனவும் தங்கம் தென்னரசு கூறினார். அண்ணா பெரியார் பெயர்களை உச்சரிக்க மாட்டேன் என கூறிய ஆளுநரை கண்டிக்காமல், அடிமை சாசனத்தை எழுதி கொடுத்துள்ளது போல அதிமுக தேசிய கீதம் இசைக்கும் முன் வெளியேறி இருப்பதாகவும் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்தார்.
ஆளுநரின் செயல் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கைகளை எடுத்து சொல்லும் உரை. சமூக நீதி, சமத்துவம் போன்ற வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்துள்ளார். ஆளுநர் பேரவையில் உரையை வாசிக்கும் போது நடைமுறைக்கு மாறாக, அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக வாசித்தார் என கூறினார்.
மேலும் 48 பக்கங்கள் கொண்ட ஆளுநர் உரையில், 2 இடங்களில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்துள்ளார். அரசியல் சட்டத்தை இயற்றிய அம்பேத்கர் பெயரை கூட ஆளுநர் சொல்ல மறுத்திருக்கிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
source https://news7tamil.live/what-happened-in-the-governors-speech-minister-thangam-southern-state-explanation.html