9 1 2023
தமிழக சட்டசபையில் இன்று காலை ஆளுனர் நடந்துகொண்ட விதம் இப்படிப்பட்ட ஆளுனரை தமிழகம் இதுவரை கண்டதில்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
2023-ம் ஆண்டின் தமிழகத்தின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுனர் உரையுடன் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதேபோல் ஆளுனர் இன்று சட்டசபையில் உரையாற்றினார். தமிழக அரசு தயாரித்த உரையை காலை 10 மணிக்கு வாசிக்க தொடங்கிய ஆளுனர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல், பெரியார், காமராஜர், அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி என பல வார்த்தைகளை படிக்காமல் புறக்கணித்தார்.
இதனால் சட்டசபையில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், ஆளுனரின் இந்த செயலுக்கு முதல்வர் ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்தார். மேலும் ஆளுனர் இந்த வார்த்தைகளை புறக்கணித்ததோடு மட்டுமல்லாமல் அவர் தான் சொந்தமாக பேசிய வார்த்தைகள் எதுவும் அவைக்குறிப்பில் இடம் பெறாது என்று தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆளுனர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து பாதியில் வெளியேறினார்.
அவருடன் சேர்ந்து அதிமுகவினரும் அவையில் இருந்து வெளியேறினர். இதனிடையே தேசிய கீதம் இசைப்பதற்கு முன் அவையில் இருந்து வெளியேறியது அவை மீறல் என்று கூறி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கரின் பெயரை கூட கூறாமல் இருக்கிறார் என்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சட்டப்பேரவை மரபுகளையும், அவை நாகரிகத்தையும் மதிக்காத இப்படிப்பட்ட ஆளுனரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை! என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலைாகி வரும் நிலையில், இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pmk-head-dr-ramadoss-say-about-tn-assembly-and-governor-573660/