11 1 23
க.சண்முகவடிவேல்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மையமாக தற்போது அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. சட்டமன்றத்தின் 2023-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடரின்போது ஆளுநர் தமிழ்நாடு அரசு கொடுத்திருந்த அறிக்கையினை அப்படியே வாசிக்காமல் பல இடங்களை தவிர்த்து வாசித்து ஆளும் கட்சியின் விமர்சனங்களுக்கு உள்ளானார். ஆளுநர் சட்டமன்றத்தில் இருக்கும்போதே அவருக்கு கண்டன தீர்மானத்தை முதல்வர் கொண்டு வந்து ஒருமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்.
இதுபற்றி அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஆளுநர், அடுத்த விநாடியே வெளியே கிளம்பிவிட்டார். ஆனால் தேசிய கீதம் ஒலிக்கப்படுவதற்கு முன் சென்றது பெரும் சர்ச்சையானது. அதுமட்டுமின்றி உரையை மாற்றி வாசித்த ஆளுநர், அவர் இருக்கும் போதே தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் என தமிழக சட்டப்பேரவை இதுவரை காணாத பரபரப்பான நிகழ்வுகளை சந்தித்தது
இந்த நிலையில், திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சிக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்க மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் மட்டுமே சென்றனர். வழக்கமாக தமிழ்நாடு ஆளுநர் வருகை தந்தால் அந்தந்த மாநகராட்சி மேயர்கள் தங்களது மேயர் அங்கியுடன் சென்று வரவேற்பது மரபும், வழக்கமாகவே இருந்த நிலையில் இந்தமுறை ஆளுநர் திருச்சி விமான நிலையம் வந்தபோது திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் வரவேற்க செல்லவில்லை. அவரை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
வழக்கமாக ஆளுநர் ஒரு நகருக்கு செல்லும்போது மேயர் சென்று வரவேற்பார். கடந்த ஆண்டில் கூட திருச்சி வந்த போது திமுக மேயர் நேரில் சென்று வரவேற்ற நிலையில், தற்போது ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இடையில் பனிப்போர் மூண்டுள்ளதால் ஆளுநரை கண்டு கொள்ளவில்லை என அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. விமான நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்து, பின்னர் காரில் தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார் ஆளுநர்.
அதேபோல், தஞ்சாவூர் சென்றதும், அங்கும் ஆளுநரை வரவேற்க திமுக மேயர் வரவில்லை, ஆளுநரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர்தான் வரவேற்றனர். தஞ்சாவூரில் தற்போது திமுகவை சேர்ந்த ராமநாதன் மேயராக இருக்கிறார்.
திருச்சி, தஞ்சாவூர் என இரண்டு திமுக மேயர்களும் ஆளுநர் ஆர்.என்.ரவியை புறக்கணித்துள்ளனர். இதுதவிர தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் அழுத்தம் கொடுக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, திருச்சி வந்த ஆளுநருக்கு தமிழ் அமைப்புகள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியானதையொட்டி திருச்சி விமான நிலையத்தை சுற்றிலும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், திருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சாவூர் வரை வழி நெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-governor-rn-ravi-boycotted-by-mayor-of-trichy-thanjavur-574885/