வியாழன், 2 பிப்ரவரி, 2023

ராகுல் நடை பயணம் உரத்துச் சொன்ன செய்திகள்

 1 2 2023

ராகுல் நடை பயணம் உரத்துச் சொன்ன செய்திகள்

அரியகுளம் பெருமாள் மணி, ஊடகவியலாளர்

ஜனவரி மாத பனியில் நீண்ட தாடியுடனும், முழங்கால் அளவு மேலங்கியுடனும் உரையாற்றி தனது நெடும் பயணத்தை நிறைவு செய்துள்ளார் ராகுல் காந்தி. தென்குமரியில் தொடங்கிய ஒற்றுமை பயணம், காந்தி நினைவிடத்தின் அருகில் தொடங்கிய பயணம் உத்தமர் காந்தியின் நினைவு தினத்தன்று நிறைவு பெற்றது.

நடைபயணங்கள் இந்திய அரசியலின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று. தங்களை மக்களுடன் பிணைக்க காந்தி தேர்ந்தெடுத்த உத்திகளில் முதன்மையானது நடை பயணம். நடந்து சென்று மகாத்மா அள்ளிய ஒரு பிடி உப்பு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை அசைத்தது. கீழைத்தேய தத்துவம் எளிமையை போதிப்பது அதன் கூறுகளை அரசியலில் பயன்படுத்தியது காந்தியாரின் பெரிய வெற்றி. நீண்ட தாடி, நடை என்பதெல்லாம் மெய்யியல் மரபின் கூறுகள் அரசியல் அரங்கில் இவற்றை பயன்படுத்துவது காந்தியத்தின் நீட்சி. மசூதி, சர்ச், குருத்வாரா, கோயில் என ஏறி இறங்குவது ஆன்மீக தேடல் உள்ளவனின் படிநிலைகள். காந்தியத்தை, ஆன்மீகத்தை உள்ளடக்கிய பயணத்தை நிறைவு செய்துள்ளார் ராகுல்.

இந்திய ஒற்றுமை பயண திட்டம் வெளியான போது அதை சந்தேக கண் கொண்டே காங்கிரஸார் பார்த்தனர். தலைவர் தேர்தலில் போட்டியிட தயங்குகிற ராகுல் ஏன் நடை பயணத்தை தொடங்குகிறார்? என்ற கேள்வி கட்சியினர் பலர் மனதில் இருந்தது. அமலாக்கத் துறை அம்மா சோனியாவையும், மகன் ராகுலையும் விசாரணைக்கு அழைத்த வேளையில் தில்லி வீதிகளில் காங்கிரஸ் தலைவர்கள் இறங்கினர். எட்டு ஆண்டு கால இடைவேளைக்கு பிறகு களம் கண்டது காங்கிரஸ். குஜராத், இமாச்சல் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த நேரம் அது. காங்கிரஸ் தனது தலைவர் யார் என்பதை முடிவு செய்து விட்டால் தேர்தலை எதிர்கொள்வது எளிது என இரண்டாம் கட்ட தலைவர்கள் கருதினர். தலைவர் தேர்தலில் போட்டியிட ராகுல் விரும்பவில்லை என்ற செய்தியை எப்படி புரிந்து கொள்வது என புரியாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் தடுமாறினர்.

செப்டம்பரில் திட்டமிட்டபடி பயணத்தை தொடங்கினார் ராகுல். காங்கிரஸ் தன்னளவில் வலிமையாக உள்ள பகுதிகள் வழியே பாதை வகுக்கப்பட்டிருந்தது. கேரளத்திற்குள் நுழைந்த ராகுலை அள்ளி அணைத்தனர் அம்மாநில மக்கள். பெண்கள் காட்டிய அன்பும், மரியாதையும் பலரும் எதிர்பாராத ஒன்று. தேசம் ராகுலை நோக்கி தன் பார்வையை திருப்பியது. கர்நாடகாவில் எதிரெதிராக இருக்கும் சீதாராமைய்யாவையும், சிவக்குமாரையும் அருகருகே நடக்க வைத்தார், மேடையில் அமர வைத்தார். காங்கிரஸ் ராகுல் பேச்சை கேட்கத் தொடங்கியது. தென் மாநிலங்களை கடந்து மகராஷ்டிராவில் நுழைந்த யாத்திரை முழுமையான அரசியல் வடிவெடுத்தது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. கெலாட் போட்டியிடுவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் கார்கே காந்தி குடும்ப ஆதரவுடன் களம் கண்டார். சசி தரூர் எதிர்த்து நின்றார். மல்லிகார்ஜூன கார்கேவின் பெரு வெற்றியில் காங்கிரஸின் உட்கட்சி பூசல்கள் மறைந்தன. குஜராத், இமாச்சல் தேர்தல்களில் ராகுல் பெரிதாக ஆர்வம் காட்டாமல் நடை பயணத்தை தொடர்ந்தார். இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஓய்வு பெற்ற ராணுவ தளபதிகள், உளவு அமைப்புகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் என பலரும் அங்கங்கே ராகுலுடன் நடந்தனர். பொருளாதார அறிஞர்கள் களத்தில் வந்து விவாதித்தனர். அந்தந்த பிராந்தியங்களில் உள்ள சிந்தனையாளர்களை சந்தித்து கலந்துரையாடியபடியே சென்றார் ராகுல்.

கொட்டும் மழையில் ராகுல் உரையாற்றும் புகைப்படம் அவரது போராட்ட குணத்திற்கு உதாரணமானது. பத்து முறைக்கு மேல் செய்தியாளர்களை சந்தித்தார். தென் மாநிலங்களை சார்ந்த வேணுகோபாலும், ஜெய்ராம் ரமேஷூம் பயணத்தில் முக்கிய பங்காற்றியது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நடை பயணத்தை அறிவார்ந்த உரையாடலாக மாற்றியது ராகுலின் முதல் வெற்றி எனலாம். சமூக வலைதளங்கள் ராகுலின் பயணத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியது. வட இந்திய குளிரில் அவர் அணிந்திருந்த டீ சர்ட்டை எதிர்க்கட்சியினர் ஆராய்ச்சி செய்கிற அளவிற்கு அவரது உடல் பலம் ஆச்சரியப்படுத்தியது. ராகுலை அவரது அரசியலை புரிந்து கொள்ள இயலாமல் தடுமாறிய பலருக்கும் நீண்ட பயணத்தின் மூலம் பதிலளித்தார் ராகுல். இந்திய தேசத்தின் எந்தவொரு பிரச்னை குறித்தும் ஆழமான பார்வையை வெளிப்படுத்தினார். நீண்ட கால நோக்கங்களை முன் வைத்து காங்கிரஸ் பயணிக்கும் என்பதை தெளிவுபடுத்தினார்.

கருத்தாக்க அரசியலில் எதிர் தரப்பினர் எட்டு ஆண்டுகளாக முன் வைத்த சொல்லாடல்கள் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு பின் வலுவிழந்தன. ‘காங்கிரஸ் முக்த் பாரத்’ பப்பு என பேசியவர்கள் அமைதி காக்கத் தொடங்கினர். கூட்டணி கட்சியினர் ராகுலின் எழுச்சி 2024 தேர்தலில் உதவியாக இருக்கும் என கருதுகின்றனர். காங்கிரஸ் தொண்டர்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கான தலைவர் தங்களுக்கு கிடைத்து விட்டதாக உளம் மகிழ்கின்றனர், இதுவே ராகுல் காந்தியின் பெரிய வெற்றி. காங்கிரஸ் தொண்டர்களின், இரண்டாம் கட்ட தலைவர்களின் நம்பிக்கையை பெற்று இயக்கத்தின் தனிப் பெரும் தலைவராக ராகுல் எழுச்சி பெற்று விட்டதை ஒற்றுமை பயணம் உறுதி செய்துள்ளது. நூறு நாட்களுக்கு மேல் பயணித்து 4000 கிலோ மீட்டர்களை கடந்து சென்று கொட்டும் பனியில் ராகுல் காந்தி ஆற்றிய உரை இந்திய ஜனநாயகத்தை மேலும் வலிமைப்படுத்துகிறது.


source https://tamil.indianexpress.com/opinion/rahul-gandhis-bharat-jodo-yatra-said-messages-to-all-586688/