வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

அதானி குழுமம் மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை

 2 2 23

அதானி குழுமம் மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதானி குழுமம் மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு அல்லது தலைமை நீதிபதி நியமனம் செய்யும் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பங்குகள் மோசடி செய்தது மற்றும் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ஸ் நிறுவனத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதானி குழுமம் மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) அல்லது தலைமை நீதிபதியால நியமனம் செய்யப்படும் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியாழக்கிஅமை முதன்மையான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 15 சதவிகிதம் சரிந்ததன் மூலம், பங்குச் சந்தையில் அதானி குழு பெரிய அடி வாங்கியது.

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி குழுமம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். “எஸ்.பி.ஐ மற்றும் எல்.ஐ.சி மூலம் கணிசமான அளவு பொதுப் பணம் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறி இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்தனர். இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகள் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், என்.சி.பி, சிவசேனா உத்தவ் தாக்கரே அணி, தி.மு.க, சி.பி.எம், ஆம் ஆத்மி மற்றும் சி.பி.ஐ(எம்) தலைவர்கள் ஒன்றாக கலந்துகொண்டனர்.

மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “எல்.ஐ.சி போன்ற நிறுவனங்கள் அல்லது எஸ்பிஐ போன்ற வங்கிகளில் கட்டப்பட்டுள்ள கோடிக்கணக்கான இந்தியர்களின் பணம் குறிப்பிட்ட நிறுவனங்களில் செலுத்தப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையால் வெளியே வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன… அந்த நிறுவனம் யாருடையது என்பது உங்களுக்குத் தெரியும். இத்தகைய நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஏன் பணம் கொடுக்கிறது? எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ மற்றும் பிற நிறுவனங்கள் ஏன் பணம் கொடுத்தது… விசாரிக்கப்பட வேண்டும். கூட்டு நாடாளுமன்றக் குழு அல்லது இந்திய தலைமை நீதிபதியின் மேற்பார்வையில் ஒரு குழு அமைக்க வேண்டும் என்று நாங்கள் கோர விரும்புகிறோம்.” என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பதிவில், “எல்.ஐ.சி, எஸ்.பிஐ மற்றும் பிற பொது நிறுவனங்களின் கட்டாய முதலீடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்; சமீப நாட்களில் பெரும் தொகையை இழந்து கோடிக்கணக்கான இந்தியர்களின் சேமிப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அரசு ஏற்காததால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார்.


source https://tamil.indianexpress.com/india/opposition-demands-probe-against-adani-group-587079/