சனி, 6 மே, 2023

குஜராத், பீகாரில் முதலமைச்சர்கள் வேந்தர்களாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் கூடாது?

5 5 23

குஜராத் மற்றும் பீகாரில் பல்கலைகழகத்திற்கு முதலமைச்சர்கள் வேந்தர்களாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் கூடாது மூத்த பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளுக்கென தனிப் பல்கலைகழகம் நிறுவுவது தொடர்பான சட்டமுன்வடிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார்.

சித்த மருத்துவத்திற்கு தனிப் பல்கலைக்கழகம் இந்தியாவிலேயே முதன் முறையாக தொடங்குவதற்கு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  ஒப்புதல் விரைவில் கிடைத்துவிடும் என்கின்ற நம்பிக்கையில் அண்ணா நகரில் அதற்கான அலுவலகம் ஒன்றும் தயார் செய்யப்பட்டது.

ஆளுநர் இந்த மசோதாவை திருப்பி அனுப்பி சில கேள்விகளை கேட்டிருந்தார். குறிப்பாக, சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் நடக்குமா..?  தேசிய தேர்வு முறைகளை சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் ஏற்குமா என்றெல்லாம் ஆளுநர் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவுக்கு ஓப்புதல் கோரி 7 முறை தமிழ்நாடு அரசின் சார்பில் ஆளுநருக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. இதுவரை ஆளுநர் இந்த மசோதாவிற்கு அனுமதி அளிக்கவில்லை. சில தினங்களுக்கு முன்பு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த மசோதா பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக உள்ளதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பிரதமராக  இருக்கும் நரேந்திர மோடி குஜராத்தில் 2012 ஆண்டு குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது மாநில முதல்வர்கள் பல்கலைக்கழக வேந்தர் ஆகலாம் என ஆளுநருக்கு மசோதா நிறைவேற்றி அனுப்பியுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சர் வேந்தராக இருக்கலாம் என தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளார் மணி நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம் நிகழ்ச்சியின் போது “ சித்த மருத்துவ பல்கலைகழகத்திற்கு முதலமைச்சர் வேந்தர் ஆகலாம் என்கிற மசோதாவிற்கு பல்கலைக்கழக மானிய குழு  விதிகளின் படி அனுமதி அளிக்க முடியாது என ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆனால் குஜராத் மற்றும் பீகாரில் உள்ள பல்கலைகழகங்களில்  முதலமைச்சர்கள் வேந்தர்களாக உள்ளனர்.
ஆளுநர் இது குறித்து கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளிக்காமல் கடந்து போகிறார். குஜராத்  மற்றும் பீகாரில் சாத்தியமானது ஏன் தமிழ்நாட்டிற்கு பொருந்தாது”என மூத்த பத்திரிக்கையாளர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.


இதேபோல மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “  தமிழ்நாட்டின் முதலமைச்சர் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராகலாம் என்பது “விதிகளுக்கு முரணானது.” என்கிறார் ஆளுநர். ஆனால் உத்திரப்பிரதேசத்தில் இரு பல்கலைக்கழகங்களுக்கு அம்மாநில முதல்வர் வேந்தராக உள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/when-chief-ministers-in-gujarat-and-bihar-are-ministers-why-not-only-in-tamil-nadu-asked-the-journalist.html