source ns7.tv
கஜா புயல் பாதிப்பு காரணமாக திருவாரூர் இடைத்தேர்தலை இப்போது நடத்த வேண்டாம், என அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் இடைத்தேர்தலை நடத்துவது சரியானதாக இருக்காது என்றும், அதனை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். இந்த மனு தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து, திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நிர்மல்ராஜ் தலைமையில், அனைத்து கட்சி பிரமுகர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கஜா புயலால் பாதிப்பு காரணமாக, இத்தொகுதியில் தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன், வாக்காளர் அட்டைகளையும் அளிக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அனைத்து கட்சியினரின் கருத்துகளை அறிக்கையாக தயார் செய்த, திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி நிர்மல் ராஜ், அதனை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூவிற்கு, அனுப்பி வைத்தார். அந்த அறிக்கை, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் நடக்குமா, நடக்காதா என்பது, இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும், என கூறப்படுகிறது.