சீனாவில் உருவாகியுள்ள 'பாபுக்' புயல் காரணமாக, அந்தமான் தீவுகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மேற்கு கடற்பகுதியில் உருவாகியுள்ள புயல், வடமேற்கு நோக்கி 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. பாபுக் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், இன்று பிற்பகலில் அந்தமான் தீவுகளின் வெளிப்பகுதியை அடையவுள்ளது. பின்னர், வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை இரவுக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, வடகிழக்காக சென்று, மியான்மார் கடலோரப் பகுதிகளில் வலுவிழக்கும் என தெரிகிறது.
இதன் காரணமாக, அந்தமான் தீவுகளில் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், நாளை மறுநாள் வரை அந்தமான் மற்றும் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனிடையே, அந்தமானுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக, அரக்கோணத்தில் இருந்து சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அந்தமான் விரைந்துள்ளனர். 'பாபுக்' புயலை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையினரை அனுப்பி வைக்குமாறு அந்தமான் அரசு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 50 பேர், ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்திலிருந்து தனி விமானம் மூலம், அந்தமான் புறப்பட்டு சென்றனர்.
source ns7.tv