ஞாயிறு, 18 ஜூன், 2023

நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் திடீர் மாற்றம்! காங்கிரஸ் கண்டனம்!

 

நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கத்தின் பெயர், பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

1948 முதல் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்த 1964 வரை அவரின் அதிகாரபூர்வ இல்லம் டெல்லியின் தீன் மூர்த்தி பவனில் இருந்தது. இதனை அடுத்து அங்கு 1966-ல் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கம் நிறுவப்பட்டது.

இந்நிலையில் சுமார் 57 வருடங்களுக்கு பிறகு தற்போது நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கத்தின் பெயர் மாற்றப்பட்டு, பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கம் என்று அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பாஜக எம்.பியும், முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனுமான நீரஜ் சேகர் எதிர்வினையாற்றி இருக்கிறார். பெயர் மாற்றம் செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், காங்கிரஸ் கட்சி, வம்சாவளி புகழ்பாடிக்கொண்டிருப்பதாக சாடியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் எத்தனை முறை பிரதமர்கள் அருங்காட்சியகத்திற்கு வந்திருக்கிறார்கள் எனவும் வினவியுள்ளார். தேசத்தை கட்டியெழுப்பியதில் ஒரு வம்சத்தை தாண்டி பலரின் அர்ப்பணிப்புகளும் இருக்கிறது என்பதை காங்கிரஸ் தலைவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என நீரஜ் சேகர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கத்தின் பெயர் மாற்றப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் தங்களது கண்டனங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.


source https://news7tamil.live/name-change-of-nehru-memorial-museum-and-library-association.html