ஞாயிறு, 18 ஜூன், 2023

சாம்பியன் பட்டம் வென்ற எகிப்து அணிக்கு ஸ்குவாஷ் உலகக்கோப்பையை வழங்கி பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

17 6 23

உலக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற எகிப்து அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்க கோப்பையை வழங்கி கௌரவித்தார்.

உலக ஸ்குவாஷ் சம்மேளனம், இந்திய ஸ்குவாஷ் சம்மேளனம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்துள்ள உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ தனியார் வளாகத்தில் கடந்த 13 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரைத் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் இந்திய அணி அரையிறுதியில் வெளியேறி நிலையில் வெண்கல பதக்கத்தை ஜப்பான் அணியுடன் பகிர்ந்து கொண்டது.

இந்நிலையில் இறுதிப் போட்டியில் எகிப்து மற்றும் மலேசியா அணிகள் இன்று மோதின. முதலில் விளையாடிய எகிப்து வீராங்கனை கென்சி அய்மன் மலேசிய வீராங்கனை சின் யிங் இடம் 3-1 என தோல்வி அடைந்தார். அதன் பின்னர் விளையாடிய எகிப்து வீரர் அலி அபோ, மலேசிய வீரர் டேரன் பிரகாசம் உடன் மோதி, அதிரடியாக விளையாடிய நிலையில் 3-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.

மூன்றாவதாக விளையாடிய எகிப்தின் முன்னணி வீராங்கனை பைரோஸ், மலேசியாவின் ஐரா அஸ்மானுடன் விளையாடி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் மலேசியாவை 4-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி எகிப்து அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் உலக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியின் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது சாம்பியன் பட்டத்தை வென்ற எகிப்து அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்க பதக்கங்களை வழங்க, முதல்வர் ஸ்டாலின் தங்க கோப்பையை வழங்கி கௌரவித்தார்.

மலேசிய அணிக்கு வெள்ளி பதக்கங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க, வெள்ளி கோப்பையை முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். இதே போன்று மூன்றாம் இடம் பிடித்த இந்தியா மற்றும் ஜப்பான் அணியினருக்கு வெண்கல பதக்கங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க, வெண்கல கோப்பையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

இறுதியாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு வீரர்களை பார்த்து உங்கள் கடமையும் பெரிது, திறமையும் பெரிது என பாராட்டினார். தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டை தேர்வு செய்து ஸ்குவாஷ் உலகக் கோப்பை நடத்திய அனைவருக்கும் நன்றி கூறினார். உலக சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் நமக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை எனக்கூறிய முதல்வர், உலகமே வியக்கும் அளவிற்கு நாம் போட்டிகளை நடத்தி காட்டியுள்ளோம் என பெருமிதம் தெரிவித்தார். தமிழ்நாட்டு விருந்தோம்பலை உலக செஸ் வீரர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாராட்டியுள்ளதாகவும், இதைவிட எங்களுக்கான அங்கீகாரம் வேறு எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார். அதோடு விளையாட்டுத் துறையின் கேப்டனாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். 


source https://news7tamil.live/chief-minister-stalin-praised-the-squash-world-cup-to-the-egyptian-team-who-won-the-title.html