2 6 23
கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாது அணை கட்ட முயற்சித்தால், தமிழக காங்கிரஸ் தடுத்து நிறுத்தும் என காங்கிரஸ் தலைவரும், மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவருமான எஸ்.பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ரூ.13.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அல்போன்ஸ் பொதுமக்களுக்கு வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வேண்டுமானால் கர்நாடக அரசு, மத்திய அரசு மற்றும் தமிழக அரசுகளிடம் அனுமதி பெற வேண்டும்.
தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் கர்நாடகாவின் எந்த செயலையும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மாட்டார்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் நீதி கேட்டு போராடும் பெண் மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். விளம்பரத்துக்காக பா.ஜ.க ‘செங்கோல்’ அரசியல் செய்கிறது. ஜனநாயக அரசுகளின் ஆட்சியாளர்கள் செங்கோல் பயன்படுத்த மாட்டார்கள்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் 149 முஸ்லிம் பெண்களுக்கு ரூ.13.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ பழனி நாடார் ஆகியோர் உடனிருந்தனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-congress-will-stop-construction-of-mekedatu-dam-says-peter-alphonse-685545/