1 6 23
தான் அரசியலில் சேர்ந்த போது எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவேன் என்று கற்பனையில் கூட நினைத்து பார்க்கவில்லை. ஆனால் இந்தப் பணி மக்களுக்கு சேவை செய்ய தனக்கு ஒரு “பெரிய வாய்ப்பை” அளித்தது என்று ராகுல் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஒருவார கால சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்று உள்ளார். இந்த பயணத்தின் போது தொழில் முனைவோர்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேசி வருகிறார்.
இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) அமெரிக்காவின் ஸ்டான்ட்போர்டு பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே ராகுல் காந்தி உரையாற்றினார். “அப்போது, 2000-ம் ஆண்டு முதன் முதலாக நான் அரசியலில் நுழைந்தபோது தகுதி நீக்கம் போன்ற கடுமையான தண்டனைகள் எல்லாம் சாத்தியமில்லை எனக் கருதினேன். ஆனால் தற்போது அதனை நிகழ்கால யதார்த்தமாக கண்முன்னே பார்த்து வருகிறேன்.
உண்மையில் இந்த நாடகம் ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் போராடிக் கொண்டிருந்தோம். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இந்தியாவில் போராடி கொண்டிருக்கின்றன. பெரும் நிதி ஆதிக்கமும், நிறுவன கட்டமைப்பும் நாட்டை ஆண்டு வருகிறது. ஜனநாயகப் போராட்டத்தை நடத்தி வருகிறோம்” என்றார்.
2019-ம் ஆண்டு “மோடி குடும்பப்பெயர்” குறித்தான கருத்தில் ராகுல் மீது அவதூறு வழக்கு பதியப்பட்டு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து, “எங்கள் போராட்டம் குறித்து மிகவும் தெளிவாக இருக்கிறேன். ஆனால் இங்கு இந்தியாவைச் சேர்ந்த இளம் மாணவர்கள் நிறைய உள்ளனர். நான் அவர்களுடன் நல்லுறவு கொள்ள விரும்புகிறேன். அவர்களுடன் பேச விரும்புகிறேன். அதைச் செய்வது எனது உரிமை” என்றார்.
பின்னர், சிலிக்கான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர்களுடன் பேசிய ராகுல், டேட்டா பிரைவரி குறித்தும் பேசினார். பெகாசஸ் ஸ்பைவேர் பிரச்சினை பற்றி பேசினார். தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு பற்றி தான் கவலைப்படவில்லை என்று கூறிய ராகுல், திடீரென ‘ஹலோ, மிஸ்டர் மோடி என நகைச்சுவையாக கூறி தனது ஐபோன் ஒட்டுக் கேட்பது போல் கருதுவதாக கூறினார். தேசமாகவும், தனிநபராகவும் டேட்டா குறித்த ப்ரைவசி மற்றும் விதிகள் வேண்டும் என்றும் அவர் கூறினார்
source https://tamil.indianexpress.com/india/hello-mr-modi-rahul-gandhi-quips-says-presume-my-phone-being-tapped-685225/