ஞாயிறு, 15 ஜனவரி, 2017

ஒரே ராக்கெட் மூலம் 103 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ

பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட் மூலம் 103 செயற்கைகோள்களை வரும் 27ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.

கடந்த 1994–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரை இஸ்ரோ பல்வேறு ராக்கெட்டுகள் மூலம் 121 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி இருக்கிறது. இவற்றில் 79 செயற்கைக்கோள்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவை. 

இந்நிலையில், ஒரே ராக்கெட் மூலம் செலுத்தி விண்ணில் நிலை நிறுத்துவதற்கான பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக நானோ வகை செயற்கைகோள்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. 

இந்த செயற்கைகோள்களை ஆய்வு செய்து ராக்கெட்டுகளில் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இருப்பது இதுவே முதன் முறையாகும். 

இதை வெற்றிகரமாக நிகழ்த்தினால் உலக சாதனை படைத்த பெருமை இஸ்ரோவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.