31 5 23
தருமபுரி அரசு கிடங்கில் நெல் மூட்டைகள் மாயமான விவகாரத்தில் உண்மை தன்மை அறிந்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் மாயமானதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தினம் ஒரு புது பிரச்சினையை மக்களுக்கு பரிசாகத் தரும் இந்த விடியா ஆட்சியில், இரண்டு தினங்களுக்கு முன்பு தான் போக்குவரத்து கழக ஊழியர்கள் குறிப்பாக திமுகவின் தொமுச-வினர் அறிவிக்கப்படாத திடீர் போராட்டத்தை நடத்தினர். அதிலிருந்து மீள்வதற்குள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் போதிய அளவில் வழங்கபடாதால்,
இன்று மெட்ரோ குடிநீர் லாரிகளை இயக்குவோர் திடீர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆட்சியில் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கே பெரும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியிருப்பதும், இனி அடுத்தடுத்து என்ன போராட்டங்கள் வருமோ என்கிற அச்ச உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டிருப்பதும் மிகுந்த வேதனைக்குரியது. ஊரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதையும் அக்கறை கொள்ளாத, உல்லாச பயணம் முடித்து ஊர் திரும்பும் சர்க்கஸ் அரசின் பொம்மை முதல்வர் , இனியும் காலம் தாழ்த்தாமல் மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளையாவது நிறைவு செய்ய வேண்டிய நடைமுறைகளை உடனடியாக மேற்கொள்ள கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டம் வெற்றிலைக்காரன் பள்ளத்தில் உள்ள திறந்தவெளி குடோனில் வைக்கப்பட்டிருந்த 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாக செய்திகள் வெளிவந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாயமான நெல் மூட்டைகள் விவகாரம் தொடர்பாக, ஆய்வு செய்ய தருமபுரி ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதற்குள் அவசரப்பட்டு, முதலீடுகளை ஈர்த்து வரும் முதலமைச்சர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக, பொறாமையின் உச்சக்கட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, செய்திகளை ஆராயாமல், வசவுகளை அள்ளித் தெளிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று கூறியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா
source https://news7tamil.live/eps-rushes-and-sprinkles-resources-minister-r-sakkarapani.html