6 7 23
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது தேனி தொகுதியில் அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
வாணி ஃபேப்ரிக்ஸ் நிறுவனத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் இயக்குனராக இருந்தபோது வாங்கிய சம்பளத்தை மறைத்துள்ளார். விவசாயத்தில் மட்டுமே வருமானம் கிடைத்தாக கூறிய நிலையில், வட்டி தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கிடைத்த வருமானத்தையும் அவர் மறைத்துள்ளார். 4 கோடியே 16 லட்ச ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருக்கக்கூடிய நிலையில், ஒரு கோடியே 35 லட்ச ரூபாய் என்று மட்டுமே ஓ.பி.ரவீந்திரநாத் தனது வேட்பு மனுவில் காட்டியுள்ளார்.
வாணி ஃபேப்ரிக்ஸ் நிறுவனத்தில் 15 ஆயிரம் பங்குகள் வைத்திருப்பதையும் வேட்பு மனுவில் ஓ.பி.ரவீந்திரநாத் மறைத்துள்ளார். இந்த சொத்து விவரங்கள் குறித்து தேர்தல் அதிகாரி முறையான விசாரணை செய்யவில்லை என வழக்கு தொடரப்பட்டது.
பணப்பட்டுவாடா மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் எந்த தன்னிச்சையான சாட்சியையும் மனுதாரர் மிலானி தரப்பில் கொண்டுவரவில்லை. சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சிகள் மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதனால் பணப்பட்டுவாடா செய்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பணப்பட்டுவாடா தொடர்பான குற்ற வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதால் அவர் தகவலை மறைத்தார் என்ற காரணத்தை கூறி, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என்கிற ரவீந்திரநாத் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. சொத்து, கடன், பொறுப்பு, வருமானம் ஆகியவற்றை மறைத்தது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வேட்புமனுவை ஏற்றது முறையற்றது. அதனால் இந்த தேர்தல் வழக்கை ஏற்றுக்கொண்டு, ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது” என அவர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/what-is-the-full-details-of-the-judgment-invalidating-op-rabindranaths-victory.html