செவ்வாய், 25 ஜூலை, 2023

மணிப்பூர் விவகாரம்: தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!

 

24 7 23

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத அம்மாநில பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என திமுக மகளிரணி வலியுறுத்தியுள்ளது.

மணிப்பூரில் பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூர சம்பவத்தைக் கண்டித்து திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக துணைப் பொதுச் செயலாளரும் மகளிர் அணித் தலைவருமான கனிமொழி எம்.பி. தலைமையில் நேற்று சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற்றது.

திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமை தாங்கினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர்.

ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மகளிரணியினர். மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மாநில பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற இந்த ஆரப்பாட்டத்தில் மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட திமுக மகளிர் அணியினர் நிர்வாகிகள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். திமுக மாநில மகளிர் ஆலோசனைக் குழு உறுப்பினர் திருமதி காரல்மார்க்ஸ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநில மருத்துவ அணிதுணைச் செயலாளரும், துணை மேயருமான அஞ்சுகம்பூபதி, மாவட்ட துணை செயலாளர் கனகவல்லிபாலாஜி உள்ளிட்டோரின் முன்னிலையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கையில் மெழுகுவர்த்தி மற்றும் பதாகைகள் ஏந்தி, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தென்காசியில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலைவியான தமிழ்செல்வி என்பவர் பேச முயன்ற போது அக்கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் என்பவர் தமிழ்செல்வியிடம் இருந்து மைக்கை பிடுங்க முயற்சி செய்துள்ளார். தொடர்ந்து சிவபத்மநாபனின் ஆதரவாளர்கள் தமிழ்செல்வியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் கொடூரத்தைக் கண்டித்து புதுச்சேரியில் திமுக மகளிரணி சார்பில் மணிப்பூர் சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர் சிவா சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி தடுக்கி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  • பி. ஜேம்ஸ் லிசா


source https://news7tamil.live/manipur-issue-dmk-protest-across-tamil-nadu.html