24 7 23

தி.மு.க-வினர் ஒரு வீட்டில் இருக்க மாட்டார்கள், காலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள் மாலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு கோவை தி.மு.க மகளிர் அணி நிர்வாகி பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.
கடந்த மாதம் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசுகையில், தி.மு.க கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ-வாக இருந்தால், அவர் ஒரு வீட்டில் இருக்க மாட்டார். தி.மு.க-வினர் காலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள் மாலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள், தி.மு.க-வின் ஜீன் அது என பேசியிருந்தார்.
இந்த நிலையில் இன்று மணிப்பூர் மாநில கலவரத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் பா.ஜ.க அரசை கண்டித்தும் தி.மு.க மகளிர் அணி சார்பில் கோவை டாடாபாத் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கோவை மாநகராட்சி மேயர் மற்றும் தி.மு.க பெண் கவுன்சிலர்கள், மாநகராட்சி மண்டல தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவரும் தி.மு.க கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்-ன் மனைவியுமான இலக்குமி இளஞ்செல்வி பேசுகையில், “வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க வென்றது என்று கேள்விப்படக் கூடாது. ஆட்சி செய்ய தகுதியில்லாத மோடி அரசு பதவி விலக வேண்டும்” என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து வானதி சீனிவாசன், தி.மு.க-வினர் ஒரு வீட்டில் இருக்க மாட்டார்கள் என பேசியதை குறிப்பிட்டு பேசிய அவர், “யம்மா வானதியம்மா எங்கள் ஆம்பளைங்களை பத்தி என்ன நெனச்சுட்டு இருக்கீங்க? காலையில் ஒரு வீடு மாலையில் ஒரு வீடுனு சொல்லீட்டு இருக்கீங்க… அனுப்சு வைக்குறதே நாங்கதா மா… நாங்கதா மா போய்டு வாங்கனு சொல்லி அனுப்சு வைக்றோம். ஒவ்வொரு வீட்டிலயும் இருக்குற பிரச்னைய தீர்க்க எங்களால முடியாதபோது, நீங்க போய் பாத்து சீர்படுத்தி கொடுங்கனு சொல்லி அனுப்பி வைக்குறதே நாங்கதா மா..” என கூறினார்.
பின்னர் குஷ்பு குறித்து பேசிய அவர், “உங்கள் செருப்பு எங்கே சென்றது, உங்கள் செருப்பை எங்கு கொண்டு சென்று ஒளித்து வைத்துள்ளீர்கள்?. முடிந்தால் மணிப்பூரில் இந்த வன்கொடுமையை செய்தவர்களை அந்த செருப்பைக் கொண்டு அடியுங்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் 200 செருப்புகளை வைத்து அடியுங்கள். அப்பொழுது தான் நீங்கள் இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஒரு தாய் என தெரிவித்தார். மேலும், நீங்கள் அந்த கட்சியில் இணைந்து விட்டீர்கள் என்ற ஒரே காரணத்திற்காக பாலியல் ஜல்சா கட்சிக்கு (பா.ஜ.க) ஆதரவாக செயல்படுவதை நாங்கள் கண்டிக்கிறோம்” என தெரிவித்தார்.
பின்னர் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோல் குறித்து பேசிய அவர், என்றைக்கு அவர்களிடம் செங்கோலை வழங்கினார்களோ இந்தியாவே நாசமாக போய்விட்டது. செங்கோலை கையில் வாங்கியதிலிருந்து எங்கு பார்த்தாலும் இது போன்ற கொடுமைகள் உயிரிழப்புகள் ரயில் விபத்துக்கள் மிகப்பெரிய மழை சேதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த செங்கோல் உங்களுக்கானது அல்ல, அந்த செங்கோலை வைத்து தலைமை தாங்கி நடத்தக்கூடியவர் தமிழராக தான் இருக்க வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் வென்று ஒரு தமிழர் பிரதமராக இந்தியாவை ஆள வேண்டும் என நாம் சூளுரை ஏற்போம்” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-women-wing-functionary-retaliate-to-vanathi-srinivasans-controversy-speech-on-dmk-cadres-728330/