28 7 23
நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் கலவரத்தில் முடிந்ததால் கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர், மாலை 6 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பாமகவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், மக்களை அச்சுறுத்தி நிலங்களை எடுக்கும் என்எல்சிக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
இதனை தொடர்ந்து, அன்புமணி தலைமையில் பாமகவினர் ஏராளமானோர் என்எல்சி நிறுவனத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அன்புமணி உள்ளிட்டோரை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் காவல்துறை வாகனத்தில் இருந்தபடியே செய்தியாளர்கள்களுக்கு அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
என்.எல்.சி. விவகாரம் அனைவருக்குமான பிரச்னை. மண்ணையும் மக்களையும் அழித்து மின்சாரம் எடுக்க தேவையில்லை. கடலூர் மாவட்டத்தை என்எல்சி நிர்வாகம் அழித்துவிட்டது. தற்போது தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது. அதனால் தமிழ்நாட்டிற்கு என்எல்சி தேவையில்லை. மின்சாரம் தயாரிக்க மாற்று வழியை யோசிக்க வேண்டும். விளைநிலங்களை என்எல்சிக்காக கையகப்படுத்தக் கூடாது. விளைநிலத்தை கையகப்படுத்தமாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் .
மேலும் என்எல்சி விவகாரத்தில் பாமக தொடர்ந்து போராடும். என்எல்சி நிறுவனத்திற்கு உடந்தையாக காவல்துறை உள்ளது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
அன்புமணி கைது செய்யப்பட்ட போது போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன. கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இருப்பினும், போராட்டக்காரர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது.
இதனால் அப்பகுதி சிறிது நேரம் போர்க்களமாக காட்சியளித்தது. இதனிடையே, கலவரம் நடைபெற்ற இடத்தை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் பார்வையிட்டார். இந்நிலையில், நெய்வேலியில் நடந்த கலவரம் குறித்து டி.ஜி.பி சங்கர் ஜிவால் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நியூஸ்7 தமிழுக்கு தொலைபேசி வழியாக பேசிய அவர் கூறியதாவது:
நெய்வேலியில் நிலைமை கட்டுக்குள் வந்ததுள்ளது. போலீசார் மீதும் போலீசார் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த போக்குவரத்துக் கழகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது. இதனால் மாவட்டம் முழுவதும் மக்கள் வீடுதிரும்ப முடியாமல் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர்.
இந்நிலையில், மாலை 6 மணி அளவில் என்எல்சி முற்றுகை போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக நிர்வாகிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அனைவரும் தங்களது சொந்த வாகனத்தில் புறப்பட்டுச்சென்றனர்.
source https://news7tamil.live/anbumani-ramadoss-who-was-arrested-in-protest-against-nlc-in-neyveli-released.html