வெள்ளி, 21 ஜூலை, 2023

மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! சென்னை மெரினாவில் எதிர்ப்பை பதிவு செய்த சமூக செயற்பாட்டாளர்கள்!!!

 

மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனம் தெரிவித்து மஜக பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான மு.தமிமுன் அன்சாரி மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் சென்னை மெரினா கடற்கரை அருகே ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். 

மணிப்பூரில் 3 மாதங்களை கடந்து நடைப்பெற்று வரும் கலவரங்கள் சர்வதேச அளவில் கண்டனங்களை பெற்று வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி மெளனம் காப்பது குறித்தும் எதிர்கட்சியினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மணிப்பூர் மாநில பாஜக அரசு இதில் அரசியல் லாபம் அடையும் நோக்கோடு , கலவரங்களை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பழங்குடியின பெண்களை கடந்த மே 4 ஆம் தேதி பொது வெளியில் நிர்வாணப்படுத்திய காணொளி நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரவி நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை உடனடியாக அமைதி வழியில் நாட்டு மக்களுக்கு உணர்ந்த சென்னை- மெரினா – காந்தி சிலை அருகில் பதாகை ஏந்தி 10 நிமிடங்கள் அமைதியாக ஒன்று கூடுவது என முன்னாள் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் முடிவு செய்தனர்.

களத்துக்கு வந்த தருணத்தில் அங்கு மெட்ரோ பணிகள் நடந்ததால், மெரினாவில் ஒளவையார் சிலை அருகே கூடுவது என முடிவானது. முதல் கட்ட எதிர்ப்பை- கண்டனத்தை தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வெளிப்படுத்திய இந்நிகழ்வில் பலரும் ஒன்று கூடினர்.

”மணிப்பூரில் இழிவுப்படுத்தப்பட்டது பெண்கள் மட்டுமல்ல நமது நாடும், கௌரவமும்” ‘மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறையை கண்டிக்கிறோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தங்கள் எதிர்ப்பை அவர்கள் வெளிபடுத்தினர். அனைவரும் தங்களது அலைபேசி விளக்குகளை ஒளிர விட்டும் அமைதி வழியில் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

நிறைவாக முன்னாள் எம்.எல்.ஏ மு.தமிமுன் அன்சாரியும், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் அம்மாநில அரசும், மத்திய அரசும் தாமதிப்பதாக குற்றம் சாட்டினர். அதோடு, மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் குறித்து கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.


source https://news7tamil.live/injustice-to-tribal-women-innnn-marrnipur-social-activists-gathered-near-marina-beach-and-registered-protest.html