மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது, பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்க, சிறப்பு பெயர் மாற்றம் முகாம், அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும், வரும் 24-ம் தேதி முதல் நடத்தப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இரு தினங்களுக்கு முன் அறிவித்தார்.
அதன்படி, ஜூலை 24-ம் தேதி முதல் 1 மாத காலம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கிட, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்கிட வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கென “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” ஒன்றினை வருகின்ற திங்கட்கிழமை (24.07.2023) முதல் ஒரு மாதகாலம் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள வீட்டு மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் பெறுவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்தி பெயர் மாற்றம் செய்து கொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது.
இருப்பினும் மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது, பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, இந்த 1 மாத கால சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
எந்தெந்த நாட்களில் முகாம்
இந்த சிறப்பு பெயர் மாற்றம் முகாம்கள், ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை தினங்கள் தவிர்த்து, அனைத்து அலுவலுக வேலை நாட்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை செயல்படும்.
வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்களில் தங்களது வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய கீழ்கண்ட அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமான ரூ. 726/- (ரூ.615 + GST ரூ.111) செலுத்தி இந்த “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” மூலம் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரர் கீழே குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
1) வளாகத்தின் விற்பனையின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
ஆதார் அட்டை
(அ) நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் (அல்லது) விற்பனைப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் (அல்லது) ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் (பரிசு பத்திரம் / செட்டில்மென்ட் பத்திரம் போன்றவை) (அல்லது) நீதிமன்ற உத்தரவு.
(ஆ) நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு விற்பனைப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் (அல்லது) ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் (பரிசு பத்திரம் / செட்டில்மென்ட் பத்திரம் போன்றவை) (அல்லது) நீதிமன்ற உத்தரவு.
2) இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
செட்டில்மென்ட் பத்திரம் (அல்லது) பகிர்வு பத்திரம் சமர்ப்பிக்கப்படாவிட்டால், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின்படி அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும்.
ஆதார் அட்டை
(அ) நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் (அல்லது) உரிமை ஆவணத்தின் ஜெராக்ஸ் நகல்.
(ஆ) நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு உரிமை ஆவணத்தின் ஜெராக்ஸ் நகல்.
3) குழு வீடுகளில் பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளில் (வீதப்பட்டி ID) பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
பில்டர்கள்/டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள்/ குடியிருப்பு வளாகங்கள்/ குரூப் ஹவுஸிங்கில் உள்ள பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய பின் வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நலவாழ்வு சங்கத்தின் பெயரில் பதிவு சான்றிதழ் (அல்லது) வளாகம்/அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற, விண்ணப்பத்தில் கையொப்பமிட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம்.
வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்களில் தங்களது வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tangedco-electricity-connection-name-change-special-camps-from-monday-727325/