திங்கள், 24 ஜூலை, 2023

மணிப்பூர் வன்முறை : கூட்டாட்சியின் மீதான தாக்குதல் – சீதாராம் யெச்சூரி பேச்சு!

 

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மோடியின் இரட்டை என்ஜின் ஆட்சி செயல்படுகிறது. மாநில உரிமைகளுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என சிபிஎம் பொது செயலாளர் சீத்தாராம் ஹெச்சூரி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. இதில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

கடந்த மே மாதம் இருபெண்கள் வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த செயலை தடுக்க முயன்ற அவரது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அனைவர் மனதிலும் ஆறாத வடுவாய் மாறியுள்ளது. இந்த கொடூர செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக அரங்கேறிய இந்த கொடும் சம்பவத்தின் எதிரொலியாக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், மாதர் சங்கத்தினர், மற்றும் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக பலவிதமான போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் இன்று மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சிபிஎம் பொது செயலாளர் சீத்தாராம் ஹெச்சூரி, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், காங்கிரஸ் மாநில செயலாளர் கே.எஸ்.அழகிரி, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய சிபிஎம் பொது செயலாளர் சீத்தாராம் ஹெச்சூரி கூறியதாவது:

”இந்தியாவின் கூட்டாட்சி மிகப்பெரிய தாக்குதலில் சிக்கியுள்ளது என்பதை மணிப்பூர் சம்பவம் காட்டுகிறது. இரட்டை என்ஜின் ஆட்சி என்று சொல்லக்கூடிய மோடி ஆட்சியில் இரு சமூகங்களை நேருக்கு நேர் நிறுத்தி பற்றி எரியச்செய்யும் நிகழ்வுகள்தான் நடைபெற்றுள்ளன.

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மோடியின் இரட்டை என்ஜின் ஆட்சி செயல்படுகிறது. மாநில உரிமைகளுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்ட அடிப்படையையும், அதன் குணாதிசியத்தையும் தகர்த்து பாசிச இந்தியாவை உருவாக்க பாஜக முயன்று வருகிறது.” இவ்வாறு சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

source https://news7tamil.live/manipur-violence-attack-on-federalism-sitaram-yechury-speech.html