மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறை தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை என்று பாஜக செய்தித் தொடர்பாளர் வினோத் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை ஒரு கும்பல் பட்டப்பகலில் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்தது தொடர்பான காணொலி வெளியாகி சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே (ஜூலை 20)மணிப்பூர் பிரச்னையை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் இந்த பிரச்னை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில், மக்களவை இன்று கூடியதும் மணிப்பூர் பிரச்னையை விவாதிக்க கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் 6-வது நாளாக அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை என கூறி பீகாரில் பாஜக செய்தித் தொடர்பாளர் வினோத் சர்மா இன்று அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அவர் தான் ராஜினாமா செய்ததை அறிவிக்கும் விதமாக பீகாரில் பதாகைகளை வைத்துள்ளார். இதில் மணிப்பூர் வன்முறைக்கு முதலமைச்சர் பிரேன் சிங் மற்றும் பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடந்துள்ளதாக முதலமைச்சர் என் பிரேன் சிங் கூறியது அதிற்சியளிக்கிறது. இதற்கு பிறகும் பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை என்றும் வினோத் கூறியுள்ளார். அத்தகைய தலைமையின் கீழ் பணிபுரிந்ததற்காக நான் சுயநினைவையும் களங்கத்தையும் உணர்கிறேன். மணிப்பூரின் நிலைமை இந்தியாவுக்கு கெட்ட பெயரைக் கொண்டு வந்துள்ளது. 80 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கனத்த மனதுடன் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் பிரதமர் மோடிக்கு வினோத் சர்மா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இது போன்ற சம்பவம் வேறு எங்கும் நடக்கவில்லை. பிரதமர் தூங்குகிறார் என்றும், முதல்வர் பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய அவருக்கு தைரியம் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் சர்மா தனது கடிதத்தில், “80 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேசத்தை நேசிப்பதாகவும், பெண் குழந்தைகளை காப்பாற்றுவதாகவும், இந்திய ‘சனாதன்’ கலாச்சாரத்தை காப்பாற்றுவதாகவும் பாசாங்கு செய்யும் பா.ஜ.க.வில் பணிபுரிந்து களங்கம் அடைந்துள்ளேன்” எனவே எனது ராஜினாமாவை ஏற்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
வினோத் ஷர்மாவின் ராஜினாமாவை JDU வெளியிட்டது;
JDU தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து வினோத் சர்மாவின் ராஜினாமாவை வெளியிட்டுள்ளது. அதில் மணிப்பூர் மகள்களை முழு நிர்வாணக் கூட்டத்தில் வைத்து தெருவில் சுற்றித் திரிந்ததன் மூலம் உலகம் முழுவதும் இந்தியா வெட்கப்பட்டு விட்டது என்றும், இதற்கு மணிப்பூர் பாஜக முதலமைச்சர் பிரேன் சிங் முழு பொறுப்பு என்றும், பிரதமர் நரேந்திர மோடி அவரை பாதுகாத்து வருகிறார் என்றும் எழுதப்பட்டுள்ளது. அத்தகைய தலைமையின் கீழ் பணிபுரியும் போது நான் களங்கமாக உணர்கிறேன். எனவே, கட்சிப் பதவிகள் மற்றும் கட்சியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி. ஜேம்ஸ் லிசா
source https://news7tamil.live/pm-modi-doesnt-have-guts-to-talk-about-situation-in-manipur-bjp-president-vinod-sharma-resigns.html