திங்கள், 24 ஜூலை, 2023

மத்திய அரசு கோமாவில் உள்ளது” – மணிப்பூர் விவகாரம் குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்!

 

மணிப்பூரில் பாஜக அரசு வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு கோமாவில் உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. இதில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

கடந்த மே மாதம் இருபெண்கள் வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த செயலை தடுக்க முயன்ற அவரது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அனைவர் மனதிலும் ஆறாத வடுவாய் மாறியுள்ளது. இந்த கொடூர செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக அரங்கேறிய இந்த கொடும் சம்பவத்தின் எதிரொலியாக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், மாதர் சங்கத்தினர், மற்றும் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக பலவிதமான போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:

”பிகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை ஒப்புக்கொள்வோம். ஆனால், மணிப்பூரில் தொடரும் இடைவிடாத வன்முறைக்கு, பிற மாநில பிரச்னைகளில் இருந்து எப்படி பரிகாரம் தேடிக் கொள்ள முடியும்? அதனை மணிப்பூரின் நிலைமையோடு எப்படி ஒப்பிட முடியும்? அதனை எப்படி மன்னிக்க முடியும்.

மணிப்பூரில் குக்கிகள் எஞ்சியிருக்கிறார்களா? அல்லது சுராசந்த்பூர் மற்றும் மணிப்பூரின் பிற மலை மாவட்டங்களில் மைதேயி இனத்தவர்கள் மீதி யாராவது இருக்கிறார்களா? அறிக்கைகள் உண்மையாக இருந்தால், மணிப்பூரில் கிட்டத்தட்ட இன அழிப்பு நடந்து முடிந்துவிட்டது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஆணை அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களைத் தாண்டி இயங்க முடியாது.

மத்திய அரசு திறமையற்று, ஒருசார்புடன் இயங்குவது மட்டுமல்லாமல், கேவலமான ஒப்பீடுகளை செய்து திரைக்கு பின்னால் ஒளிந்து கொள்வது இரக்கமற்றது. மேலும், பிகார், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தானில் கடுமையான நடவடிக்கை தேவைப்பட்டால், நிச்சயமாக மாநில அரசுகளை கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துங்கள்.

அதற்காக, மணிப்பூரில் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தை மன்னிக்க முடியாது. மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு வீழ்ச்சி அடைந்து விட்டது. மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசும் கோமாவில் உள்ளது.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


source https://news7tamil.live/the-central-government-is-in-a-coma-b-chidambarams-criticism-of-the-manipur-issue.html