திங்கள், 31 ஜூலை, 2023

பெட்ரோல், டீசல் மீது இரக்கமற்ற முறையில் மத்திய அரசு வரிவிதிக்கிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

 30 7 23

பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு இரக்கமற்ற முறையில் வரி விதித்து லாபம் ஈட்டுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள்களின் விலை குறைந்துள்ளதை பயன்படுத்தி மத்திய அரசு எரிபொருள்களின் விலையை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

எரிபொருள்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதை மத்திய அரசு கட்டுப்படுத்தி மக்களுக்கு உதவ வேண்டும். பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.25-லிருந்து 30 ரூபாய் வரை குறைக்க வேண்டும். எரிபொருட்கள் மீது விதிக்கப்படும் இரக்கமற்ற வரியினை மத்திய அரசு கைவிட வேண்டும். முந்தைய காங்கிரஸ் அரசில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகக் குறைவாக இருந்தது.

மோடி தலைமையிலான பாஜக அரசு எரிபொருள்களின் விலையை 35% குறைக்க வேண்டும். எரிபொருள்களின் விலையேற்றத்தால் மக்கள் பொருளாதார அளவில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பாஜக ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளது. எரிபொருள்கள் விலையேற்றத்தின் மூலம் மக்கள் தங்களது கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை மத்திய அரசு அவர்களிடமிருந்து கொள்ளையடித்து வருகிறது” இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/the-central-government-is-mercilessly-taxing-petrol-and-diesel-congress-alleges.html