சனி, 22 ஜூலை, 2023

கிருஷ்ணகிரி பெண்களை ஆந்திர போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்!!

 கிருஷ்ணகிரி பெண்களை ஆந்திர போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா மத்தூர் பகுதியில் உள்ள
புலியாண்டிபட்டி கூட்ரோடு கிராமத்தில் குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் பூமதி(24), பிரியா(எ)அருணா(27), ரேணுகா(34), சத்யா(45), கண்ணம்மாள்(65), என்ற 5 பெண்கள், ஐயப்பன்(40), தமிழரசன்(20), ரமேஷ்(53), என்ற 3 ஆண்கள், ஸ்ரீதர்(7), ராகுல்(5) என்ற 2 ஆண் குழந்தைகள் ஆகிய 10 நபர்களை ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்ட குற்ற பிரிவு காவல் துறையினர் சுமார் 20 பேர் அதிரடியாக புகுந்து கைது செய்துள்ளனர்.

அப்போது எதற்கு ஏன் கைது செய்கீறிர்கள் என கேட்ட போது தங்க நகைகள்
கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்ததாகவும் ஆந்திரா போலீசார்
கூறியுள்ளனர். அந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தெரியாது எனக் கூறியும்
பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் ஆந்திரா போலீசார் ஜாதி ரீதியாக பேசியும் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அனைவரையும் ஆந்திர மாநிலம் பூந்தல்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தங்க நகைகள் 4 கிலோ நாங்கள் கூறும் நகை கடையில் வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் தாங்களும் தங்களது கணவர்களும் அந்த திருட்டு சம்பசத்தில் ஈடுபட்டார்கள் என வாக்குமூலம் அளிக்க வேண்டும் எனவும் கூறி ஆந்திரா போலீசார் பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதற்கு சம்மந்தப்பட்ட குறவர் இன மக்கள் மறுப்பு தெரிவித்ததால் பூமதி, பிரியா உள்ளிட்ட பெண்களின் ஆடைகளை கலைந்து நிர்வாணமாக்கிய ஆந்திர போலீசார் அவர்கள் மீது கொடூரமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி மிளகாய் பொடியை உடல் முழுவதும் கொட்டி மனித உரிமை மீறலை நிகழ்த்தியதாக பாதிக்கப்பட்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதுமட்டுமின்றி சுமார் ஏழு பேர் கொண்ட ஆந்திர குற்ற பிரிவு காவல் துறையினர் பூமதி மற்றும் பிரியாவை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன் இந்த சம்பவங்களை செல்போன் மூலமும் வீடியோ எடுத்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இது குறித்து ஆந்திரா காவல் துறையினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பூமது கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபனுக்கு தெரிந்து தான் ஆந்திர காவல்துறையினர் தங்களை அழைத்துச் சென்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணான பிரியா கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். அதோடு, ஆந்திரா காவல் துறையினர் மட்டுமில்லாமல் குறவர் இன மக்கள் என்பதால் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினரும் இரவு நேரங்களில் பெண்களை விசாரணை என்ற
பெயரில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, பொய் வழக்குகளில் இருந்து தங்களது குடும்பத்தினரை காக்க வேண்டும் எனவும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறவர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


source https://news7tamil.live/andhra-police-took-krishnagiri-women-for-questioning-and-complained-of-rape.html