30 7 23
என்.எல்.சி நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் அனல் மின் உற்பத்தி நிலையமான என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்கப் பணிகளுக்காக அருகில் உள்ள கிராமங்களில் இருந்து நிலம் கையப்படுத்தப்பட்டது. ஆனால் கையப்படுத்தப்பட்ட நிலத்தில், நிலத்தின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது என்.எல்.சி நிர்வாகம் விவசாயம் செய்யப்பட்ட நிலங்களில் குழாய் பதிக்க கால்வாய் தோண்டியபோது, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி, அதன் தலைவர் அன்புமணி தலைமையில் வெள்ளிக்கிழமை என்.எல்.சி.,யை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. என்.எல்.சி பிரதான நுழைவுவாயில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் போது பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அங்கு பா.ம.க.,வினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், அன்புமணி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க.,வினர் போலீசாரின் வாகனங்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், கடலூர் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில் உள்ள அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நாடாளுமன்ற முடக்கம், மணிப்பூர் பிரச்சினை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பணிகள் உள்துறை அமைச்சருக்கு உள்ளது. ஆனால், அதனைவிடுத்து மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயணத்தை துவக்கி வைக்கிறார். இதன் மூலம் பா.ஜ.க.,வினர் நாட்டை விட கட்சியை பலப்படுத்தவே நினைக்கின்றனர். இது விநோதமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.
என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிரான பா.ம.க.,வின் முற்றுகை போராட்டம் வன்முறை போராட்டமாக வருத்தத்திற்குரியது. என்.எல்.சி நிறுவனம், நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டத்திற்கு உட்பட்டு நிலத்தை கையகப்படுத்த வேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக என்.எல்.சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும்போது நியாயமாக நடக்கவில்லை. நிலம் கையப்படுத்தி 50 ஆண்டுகளாகியும், விஜயமாநகரத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்கவில்லை.
என்.எல்.சி நிறுவனம் முறையான பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அதை நிறைவேற்றி நிலத்தை கையகப்படுத்திக்கொள்ள வேண்டும். அனைத்து கட்சிகளும் விவசாயிகளுக்காக போராடக்கூடியவர்கள் தான். என்.எல்.சி நிறுவனம் இழுத்து மூடப்பட வேண்டும், அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க கூறுவதை ஏற்க முடியாது. என்.எல்.சி பொதுத்துறை நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-cpim-secretary-balakrishnan-slams-pmk-on-protest-against-nlc-731648/