1950 முதல் 1974 வரையிலான காலத்திற்குரிய வில்லங்க சான்றுகளை இணைய வழியில் கணினியில் பதிவேற்றம் செய்ய அரசு 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 1950 முதல் இன்றைய நாள் வரையிலான வில்லங்க சான்றுகளை பொதுமக்கள் இணையதள வாயிலாக பார்வையிடவும், அதன் பிரதிகளை கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அரசு அனுமதி அளித்துள்ளது. பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி இது குறித்து தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி?
அரசின் அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பத்திரப் பதிவுத் துறையும், துறை செயல்பாடுகளை கணினி வழியில் செய்து வருகிறது. பொது மக்கள் வில்லங்க சான்றுகளை இணைய வழியில் பெற வழி வகை செய்துள்ளது.
வீட்டில் இருந்தே இணைய வழி மூலமாக வில்லங்க சான்றிதழை பெறும் வசதி இருப்பதால் பொதுமக்கள் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
- வில்லங்கச் சான்றிதழைப் பார்க்க, டவுன்லோடு செய்ய தமிழகப் பதிவுத்துறையின் https://tnreginet.gov.in/portal/ என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2. அடுத்து E-services> Encumbrance Certificate > View EC என்ற லிங்க்கை கொடுக்க வேண்டும். இதன் பின் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பார்க்கலாம்.
3. வில்லங்க சான்று பெற அதே லிங்க்கில் “Apply online” கொடுக்க வேண்டும்.
4. இப்போது விண்ணப்ப படிவம் ஒன்று வரும். அதில் பெயர், தொலைப்பேசி எண், பதிவு மண்டலம், பதிவு மாவட்டம், சார்- பதிவாளர் அலுவலகம், சொத்து அமைந்துள்ள கிராமம், சர்வே எண், தேதி மற்றும் மாதம், எத்தனை ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் தேவை உள்ளிட்ட விவரங்களைப் பதிவிட வேண்டும்.
5. அடுத்து பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் எண் மற்றும் சார்-பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள ஊர் ஆகிய தகவல்களை கொடுக்க வேண்டும்.
6. இப்போது, கேப்ட்சா உள்ளிட வேண்டும். இதன் பின் வில்லங்கச் சான்று விவரங்களை இணையத்தில் பார்க்கலாம். பி.டி.எஃப் வடிவில் வில்லங்கச் சான்று விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணம் ஏதும் இல்லாமல் இந்த நடைமுறைகளைச் செய்து ஆன்லைனில் இலவசமாக வில்லங்கச் சான்று பெறலாம்.
source https://tamil.indianexpress.com/technology/how-to-get-villanga-certificate-encumbrance-certificate-online-for-free-729959/