வெள்ளி, 21 ஜூலை, 2023

ரூ100 கோடி சொத்து பத்திரப் பதிவு ரத்து;

 

100 கோடி மதிப்பிலான சொத்து பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்டது, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என பா.ஜ.க இளைஞர் அணியின் மாநிலத் துணைத் தலைவர் நயினார் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி. இவர் தமிழ்நாடு மாநில பா.ஜ.க இளைஞர் அணி துணைத் தலைவாராக உள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி மோசடியாக நிலம் பத்திரப் பதிவு செய்ததாக புகார் செய்யப்பட்ட நிலையில், அவரின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் ஆற்காடு சாலையில் உள்ள சுமார் 1.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை நயினார் பாலாஜி மோசடியாக நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் பத்திரப்பதிவு செய்து முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்திருந்தது. இந்த பதிவு ரத்து செய்யப்படுவதற்கு முகாந்திரம் உள்ள ஆவணம் என்றும், இது தற்போது வில்லங்க சான்றிதழிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் தெரிவித்தது.

இந்நிலையில் விசாரணையில் மோசடியாக பத்திரப்பதிவு செய்தது உறுதியான நிலையில் ராதாபுரம் மண்டல துணை பத்திரப்பதிவு துறை தலைவர் நயினார் பாலாஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப் பதிவை ரத்து செய்து உத்தரவிட்டார். புகார் குறித்து 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரப் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது பத்திரப் பதிவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-leader-nainar-balaji-explains-rs-100-crore-land-registration-cancel-issue-726599/