திங்கள், 31 ஜூலை, 2023

7 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் திறந்ததாக மத்திய அரசு பொய் சொல்கிறது – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

 30 7 23

நாட்டில் விமான நிலையங்களை திறப்பது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்தது.

இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் கூறியதாவது:

கடந்த 7 ஆண்டுகளில் 74 விமான நிலையங்களை திறந்ததாக மத்திய அரசு கூறுவது உண்மைக்கு புறம்பானது. மே 2014-ல் இருந்து திறக்கப்பட்ட விமான நிலையங்களில் 11 மட்டுமே செயல்படுகின்றன. விமானங்கள் வந்து செல்லாததால் 74 விமான நிலையங்களில் 15 விமான நிலையங்கள் இயங்குவதே இல்லை.

பாஜக தலைமையிலான மத்திய அரசு 479 புதிய பாதைகளை அறிமுகப்படுத்தியது. இவற்றில் 225 செயல்பாட்டில் இல்லை. அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டமும் ஓரளவு உண்மையாகவும், பெரும்பாலும் பொய்யாகவும் தான் இருக்கிறது. பெருமை மற்றும் மிகைப்படுத்தலுக்கான அடையாளமாக தான் மத்திய அரசு செயல்படுகிறது.” இவ்வாறு அந்த பதிவில் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த மத்திய விமானப் போக்குவத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய அரசின் கீழ் கட்டப்பட்ட விமான நிலையங்கள் குறித்து விரிவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவில் கூறியிருப்பது:

“பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசாங்கம் 74 விமான நிலையங்களைச் செயல்படுத்தியுள்ளது. அவற்றில் சில பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன. அவை பல தசாப்தங்களாக தேசிய பொறுப்பில் இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ 75,000 கோடி செலவில் இந்த விமான நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இது நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சியுடன் நேரடியாக தொடர்புடையது.

சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் விமானப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். முந்தைய அரசுகள் 70 ஆண்டுகளில் சாதிக்கத் தவறியதை வெறும் 9 ஆண்டுகளில் சாதித்துள்ளனர். உண்மையை சரிபார்ப்பதற்கு தற்போதைய காங்கிரஸ் வலுவானதாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. தயவு செய்து அரைகுறை உண்மைகளை நிலைநிறுத்த வேண்டாம்” இவ்வாறு பதிவிட்டிருந்தார்.


source https://news7tamil.live/the-central-government-is-lying-about-opening-74-airports-in-7-years-b-chidambarams-accusation.html