ஞாயிறு, 23 ஜூலை, 2023

பொது சிவில் சட்டம் இந்துக்களுக்கும் எதிரானது!” – நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் வியூகம் நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் பேச்சு!!!

 

பொது சிவில் சட்டம் இந்துக்களுக்கும் எதிரானது என நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் வியூகம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கூறியுள்ளார். 

நாட்டில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென மதச் சட்டங்களை பின்பற்றுகின்றன. அவற்றுக்குப் பதிலாக எல்லோரும் ஒரே மாதிரி பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாஜக அரசு பல ஆண்டுகளாக கூறி வருகிறது. அதாவது, அனைத்து மதத்தை சோ்ந்தவா்களுக்கும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை தொடா்பாக நாடு முழுவதும் ஒரே சட்டமாக பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. இதற்கு பல வகையில் ஆதரவுகளும் எதிா்ப்புகளும் எழுந்துள்ளன

இந்நிலையில் பொது சிவில் சட்டம் குறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் வியூகம் நிகழ்ச்சியில் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜின் கேள்விகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் பதில் அளித்துள்ளார்.

அந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்ததாவது:

21-ஆவது சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் வேண்டாம். தனி நபர் சட்டத்தில் தேவைபடும் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஏற்கனவே கூறியுள்ளது.

அசாம், மணிப்பூர், மிசோரம், மேகாலயா, திரிபுரா, நாகாலாத், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு தனிப்பட்ட சட்டம் உள்ளது. இதை என்ன செய்வார்கள், இந்து மதத்தை சேர்ந்த சுமார் 11 லட்சம் குடும்பங்கள் கூட்டுகுடும்பம் என்கிற அடிப்படையில் வரி விலக்கு பெறுகின்றனர். இது முற்றிலுமாக பொதுசிவில் சட்டத்தால் இல்லாமல் போகும். இது மிகவும் பெரிய விசயம். இந்த விசயத்தில் கைவைத்தால் வட கிழக்கு மாநிலங்கள் உள்பட நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பும்.

இதுமட்டுமல்லாது கிறிஸ்துவ தேவாலயங்களில் நடத்தப்படும் திருமணங்கள் செல்லாம் போகும், இந்து மக்கள் புரோகிதர் முன்னிலையில் கோயில்களில் திருமணம் செய்வதும் செல்லாது ஆகும். மக்களால் மக்களுக்கு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பில் கூறியுள்ளதற்கு விரோதமாக மதரீதியிலான விசயங்களில் மத்திய அரசு  தலையிடுவது ஏன்? மக்களுக்கு பிரச்னை கொடுக்கும் எனத் தெரிந்தும் பொதுசிவில் சட்டத்தை கொண்டுவர நினைப்பது ஏன்?

நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. ஒவ்வொரு மதத்தினருக்கும் உள்ள சட்டங்களில் தேவையான மாற்றங்களை செய்யலாமே, தனிப்பட்ட மத உணர்வுகளை பாதிக்கும் வண்ணம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முனைவது ஏன்?

பொதுசிவில் சட்டம் ஏதோ சிறுபான்மையினரை மட்டும் பாதிக்கும் எனக் கூறப்படுவது மாயை. இந்துக்களையும் இந்த பொதுசிவில் சட்டம் கடுமையாக பாதிக்கும். இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கூறியுள்ளார்.


source https://news7tamil.live/general-civil-law-is-against-hindus-too-rajya-sabha-member-p-wilson-speech-on-news-7-tamil-tvs-vyugam-program.html