சனி, 22 ஜூலை, 2023

பல்கலை., கல்லூரிகளில் ஒரே பாடத்திட்டம்:

 தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்த உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, இ.டி. சோதனை பற்றிய செய்தியாளர்களின் கேள்விகளைத் தவிர்த்தார்.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்களுடன் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது: “2023-24-ம் கல்வியாண்டில் இருந்தே பொது பாடத்திட்டம் கலை அறிவியல் கல்லூரிகளில் எல்லாம் அறிவிக்கப்பட்டுவிடும். புதிதாக ஏதாவது பாடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தால், அவற்றுக்கு இந்தாண்டு அதற்கான பாடத்திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, 2024-25-ம் கல்வியாண்டில் இருந்து நிறைவேற்றப்படும்.

அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தன்னாட்சி கல்லூரிகள் அனைத்து கல்லூரிகளிலும் இந்தப் பாடத்திட்டங்கள் ஒரே மாதிரியாக பின்பற்றப்படும். இதனால், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கு நன்மை. ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து வேறு பல்கலைக்கழகத்துக்கு மாறுகின்ற மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என்கிற அடிப்படையில்தான் இந்தப் பாடத்திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். இதற்கு அனைத்து துணைவேந்தர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

என்.ஐ.ஆர்.எஃப் ரேக்கிங் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியெல்லாம் துணைவேந்தர்கள் தங்களுடைய கருத்துகளை கூறியிருக்கிறார்கள். முதல்வர் அறிவித்ததைப் போல, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், பாடங்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டு, அதன்மூலம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்பு பெறும் வகையில் அந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

என்.ஐ.ஆர்.எஃப் ரேக்கிங்கில், தேசிய அளவில் இடம்பெறுவதற்காக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அளவில் தரம் உயர்த்த அறிவுறுத்தியிருக்கிறோம். இதற்கு அனைத்து துணைவேந்தர்களும் தங்களுடைய முழு முயற்சியையும் அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். நிச்சயமாக வரும் ஆண்டுகளில், கல்வித்தரம் உலக அளவிலும், இந்திய அளவிலும் உயர்த்தப்படும்.

பல்கலைக் கழகங்களில் உள்ள பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் பலர் தற்காலிகமாகவே இருப்பதாக சொல்லப்பட்டது. இது தொடர்பாகவும் இன்று விவாதித்தோம். சில பல்கலைக்கழகங்களில் நிரந்தரமாக பணி நியமனம் பெற்றவர்கள் உள்ளனர். சில பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் நிறைவேற்றப்படும். சில கல்லூரிகளில் தற்காலிகமாக சில பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பல்கலைக்கழகங்களுக்கு நிரந்தர பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் நியமிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறையில் பணியிடங்களை பூர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்படவுள்ளது. அந்த குழுவில், துணைவேந்தர், அரசு நியமன உறுப்பினர், உள்ளிட்ட 4 முதல் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் மூலம் இந்த பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கும் துணைவேந்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதுவும் விரைவில் நடக்கும்.

பல இடங்களில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் 4000 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆணை வழங்கியுள்ளார். அது கொஞ்சம் காலதாமதப்படுகிறது. அதுவும் விரைவில் முடிவு செய்யப்பட்டு, அவர்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த 4000 காலியிடங்களில் கவுரவ பேராசிரியர்களையும் நாங்கள் நியமித்திருக்கிறோம். கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ.20 ஆயிரம், இனி ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.

மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வான ஸ்லெட் தேர்வு (SLET) இரண்டு, மூன்று ஆண்டுகளாக நடத்தவில்லை. அதை இந்த ஆண்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறோம். அதை ஒரு பல்கலைக்கழகம்தான் நடத்த வேண்டும். அது எந்த பல்கலைக்கழகம் என்பது முடிவு செய்து அறிவிக்கப்படும்.” என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

மேலும், எல்லா கல்லூரிகளிலும் குறிபிட்ட காலத்திற்கு தேர்வுகளை நடத்த வேண்டும் என்று கலந்து பேசி அறிவிக்க இருக்கிறார்கள்.” என்று கூறினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/ponmudi-ignore-questions-from-media-about-ed-raid-single-syllabus-726965/