திங்கள், 21 ஆகஸ்ட், 2023

ஸ்காலர்ஷிப் போர்ட்டலில் உள்ள 830 சிறுபான்மை நிறுவனங்கள் போலி; மத்திய அரசு கண்டுபிடிப்பு

 

Esha Roy 

தேசிய ஸ்காலர்ஷிப் போர்ட்டலில் (NSP) பதிவுசெய்யப்பட்டுள்ள குறைந்தபட்சம் 830 சிறுபான்மை நிறுவனங்கள் போலியானவை அல்லது செயல்படாதவை என சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் கண்டறிந்துள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு தெரியவந்துள்ளது. மேலும், இந்த 830 நிறுவனங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் 144 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளன என்றும் தெரியவந்துள்ளது.

சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் ஆதாரங்களின்படி, தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் (NCAER), சிறுபான்மையினரின் உதவித்தொகை குறித்த ஒரு வருட கால விசாரணைக்குப் பிறகு இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது, சில முரண்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்த பிறகு அமைச்சகம் ஆகஸ்ட் 2022 இல் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியது.

ஜூலை 10 அன்று, அமைச்சகம் தனது கண்டுபிடிப்புகளை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தது, சி.பி.ஐ இப்போது அதன் சொந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

21 மாநிலங்களில் NCAER ஆல் விசாரிக்கப்பட்ட 1,572 நிறுவனங்களில் இந்த 830 போலி அல்லது செயல்படாத சிறுபான்மை நிறுவனங்கள் அடங்கும் என்று ஆதாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், சிறுபான்மையினரின் உதவித்தொகையை வழங்குவதற்காக நாடு முழுவதும் 1.8 லட்சம் கல்வி நிறுவனங்கள் தேசிய ஸ்காலர்ஷிப் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த போலி அல்லது செயல்படாத நிறுவனங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

“NCAER தனது அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. இந்த 830 நிறுவனங்கள், அதாவது இதுவரை ஆய்வு செய்யப்பட்டதில் 53% நிறுவனங்கள் போலியானவை அல்லது செயல்படாதவை” என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த 830 நிறுவனங்களில், சத்தீஸ்கரில் 62 நிறுவனங்களும், ராஜஸ்தானில் 99 நிறுவனங்களும் செயல்படாதவை என NCAER கண்டறிந்துள்ளது. “விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களில், அசாமில் 68% போலியானது, கர்நாடகாவில் 64%, உத்தரகண்டில் 60%, உத்தரபிரதேசத்தில் 44%, மத்தியப் பிரதேசத்தில் 40%; மற்றும் மேற்கு வங்காளத்தில் 39% போலியானவை அல்லது செயல்படாதவை என்று கண்டறியப்பட்டது,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறுபான்மை உதவித்தொகைகள் 2016 இல் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு NSP க்கு கொண்டு வரப்பட்டன. ஆதாரங்களின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் அமைச்சகம் சிறுபான்மை உதவித்தொகை திட்டங்களின் கீழ் ஆண்டுக்கு ரூ. 2,000 கோடிக்கு மேல் நிதியை வெளியிட்டுள்ளது. 2007-08 முதல் 2021-22 வரையிலான மொத்தத் தொகை ரூ.22,000 கோடி, என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

2020 ஆம் ஆண்டில் ஜார்கண்ட் மற்றும் பீகாரில் இடைத்தரகர்கள், வங்கி பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பள்ளி ஊழியர்களின் தொடர்பு காரணமாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கான மத்திய நிதியுதவியுடன் கூடிய மெட்ரிக்-க்கு முந்தைய உதவித்தொகைத் திட்டம் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலில் செய்தி வெளியிட்டது. பின்னர் மத்திய அரசு நவம்பர் 2020 இல் முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

2020 விசாரணையின் போது, ​​ஜார்கண்ட், பீகார், பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சி.பி.ஐ விசாரணை நடத்தியதாகவும், அங்கு பலர் கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

”ஜார்க்கண்டில் 19 மற்றும் பீகாரில் ஐந்து எஃப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், சி.பி.ஐ விசாரணைக்குப் பிறகும், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தை ஆய்வு செய்ததில், சில முரண்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன’’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீபத்தில் முடிவடைந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது, ​​சிறுபான்மை விவகார அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனது அமைச்சகம் நிறுவனங்கள் மற்றும் பயனாளிகளின் மறு சரிபார்ப்பைத் தொடங்கியுள்ளது என்றும், “மத்திய அரசின் சிறுபான்மை உதவித்தொகை திட்டத்தை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்யும்” பணியை NCAER க்கு வழங்கியுள்ளது என்றும் எழுத்துப்பூர்வ பதில்கள் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவித்தார். ஸ்மிருதி இரானி ஜூலை 2022 இல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதுகுறித்து கருத்து கேட்க அவரை அணுக முடியவில்லை.

முறைகேடுகள் பற்றிய விவரங்களை அளித்து, UDISE இல் பதிவுசெய்யப்பட்ட குறியீடுகளைப் பயன்படுத்தி போலி நிறுவனங்கள் இருப்பது மிகவும் வெளிப்படையான முரண்பாடுகளில் ஒன்றாகும் என்று ஆதாரங்கள் தெரிவித்தன, UDISE என்பது முன் தொடக்க வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை முறையான கல்வியை வழங்கும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளின் தகவல்களை சேகரிக்கும் அமைப்பு ஆகும்.

“NSP இல் சில குறியீடுகள் உள்ளன, இதன் மூலம் போர்டல் மூன்று வகைகளில் சிவப்புக் கொடிகளை (எச்சரிக்கைகளை) உயர்த்துகிறது – குறைந்த ஆபத்து, நடுத்தர ஆபத்து மற்றும் அதிக ஆபத்து. அதிக ஆபத்துள்ள சிவப்புக் கொடிகள் சிலவற்றைப் பார்க்குமாறு NCAER-ஐக் கேட்டோம். மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

“நிறுவனங்கள், உள்ளூர் நிர்வாகம் மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட முறையான நிறுவனமயமாக்கப்பட்ட ஊழலை” NCAER சுட்டிக்காட்டியுள்ளது.

“சிறுபான்மையினரின் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறை என்னவென்றால், பயனாளி NSP இல் விண்ணப்பிக்கிறார். ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு இன்ஸ்டிடியூட் நோடல் அதிகாரி இருக்கிறார், அவர் இந்த பயனாளிகளை சரிபார்த்து, அவர்கள் உண்மையானவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறார், மேலும் மாணவர் அந்த நிறுவனத்தில் படிக்கிறார் என்பதையும் உறுதிப்படுத்துகிறார். இதையடுத்து மாவட்ட சிறுபான்மை அதிகாரியால் சரிபார்க்கப்படும்… அதாவது, மாவட்ட சிறுபான்மை அலுவலர் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்பட்டாலும், பல்வேறு நிலைகளில் நிதி விரயமாக்கப்பட்டு வருகிறது,”

“மேலும், ஒவ்வொரு மாணவரும் ஒரு வங்கிக் கணக்கைத் திறக்க வேண்டும், அதற்கு KYC தேவைப்படுகிறது. இந்த முழு செயல்முறையும் நிறுவனங்கள், உள்ளூர் நிர்வாகம் மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட முறையான நிறுவனமயமாக்கப்பட்ட ஊழலைச் சுட்டிக்காட்டுகிறது,” என்று ஆதாரங்கள் தெரிவித்தன.

நிகழ்வுகளை மேற்கோள் காட்டி, விடுதிகள் இல்லாத நிறுவனங்களில் விடுதி உதவித்தொகைக்கு 1.3 லட்சம் விண்ணப்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பெண்கள் பள்ளிகளில் இருந்து ஆண் பயனாளிகள் விண்ணப்பித்த முறைகேடுகளும் இருந்தன.

“ராஜஸ்தானில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 1-8 வகுப்புகளுக்கு விண்ணப்பங்களைப் பெற்றோம், அப்போது பள்ளியில் 9-10 வகுப்புகள் மட்டுமே இருந்தன. பீகாரில் உள்ள சீதாமர்ஹி மாவட்டத்தில், உதவித்தொகைக்கு விண்ணப்பித்த 95% மாணவர்களின் விண்ணப்பங்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டது, இந்த விண்ணப்பங்கள் சைபர் கஃபே மூலம் சமர்ப்பிக்கப்பட்டு, அருகிலுள்ள பயிற்சி நிறுவனத்தில் உள்ள மாணவர்களின் விவரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. சத்தீஸ்கரில், சிறுபான்மை மாணவர்கள் இல்லாத பழங்குடியினர் பெண்கள் பள்ளியில் இருந்து பயனாளிகள் விண்ணப்பங்கள் செய்யப்பட்டன, மேலும் பயன்படுத்தப்பட்ட விவரங்கள் கர்நாடகாவில் உள்ள மாணவர்களின் விவரங்கள் ஆகும்.

மற்றொரு முறைகேடாக, 2018-19 ஆம் ஆண்டில், ஒரே தொலைபேசி எண்ணுடன் 2,239 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

“உதவித்தொகை வழங்கப்பட்டவுடனேயே அதிக இடைநிற்றல் விகிதத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம். உதவித்தொகை வழங்கப்பட்ட பிறகு 60% க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறினர்,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

source https://tamil.indianexpress.com/india/govt-finds-830-minority-institutions-on-scholarship-portal-are-fake-741107/