சனி, 30 செப்டம்பர், 2023

”AI தொழில்நுட்பத்தால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்!” – உருகுவேயில் திமுக எம்பி வில்சன் உரை

 

AI தொழில்நுட்பத்தால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக திமுக எம்பி பி.வில்சன் தெரிவித்துள்ளார்.

உருகுவேயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் கலந்து கொண்டு AI தொழில்நுட்பம் குறித்து விரிவாக உரையாற்றினார்.

அவர் பேசியதாவது: “செயற்கை நுண்ணறிவு (AI) நம்முடைய சமூகத்தை இதுவரை எதிர்பார்க்காத வழிகளில் மறுவரையறை செய்து வருகிறது. AI தொழில்நுட்பத்தை வரவேற்கும் அதேவேளையில், AI மனித சமுதாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்பதை நாம் புறக்கணிக்க முடியாது. எனவே மனிதர்கள் தங்கள் இயற்கையான நுண்ணறிவுடன் எப்போதும் செயற்கை நுண்ணறிவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

AI தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி மற்றும் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறி வருகிறது. AI பயன்பாடுகள் கிட்டத்தட்ட இன்று எல்லா துறைகளிலும் காணப்படுகின்றன. AI தொழில்நுட்பத்தால் புதிய வாய்ப்புகள் உருவாகும் அதே வேளையில், அதன் பயன்படுத்தும்போது ஏற்படும் அபாயங்களைப் புரிந்துகொள்வதற்கும், அவற்றை நிர்வகிப்பதும் பெரும் சவாலாக உள்ளது.

தொழில்நுட்பத்தில் முன்னேறுவதற்கான போட்டியில் நாம் ஈடுபடுவதால், பாதுகாப்புகளில் நம்முடைய கவனம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அணு ஆயுத பயன்பாட்டைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒப்பந்தங்களைப் போலவே, AI-க்கும் ஒப்பந்தங்கள் வேண்டும் என கோரிக்கை AI தொழில்நுட்ப நிபுணர்களிடமிருந்தே எழுந்துள்ளது.

AI அமைப்புகளின் விளைவுகள் நேர்மறையாகவும், அவற்றின் அபாயங்களைக்  கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருந்தால் மட்டுமே, அவற்றின் உருவாக்கத்திற்கு நாடாளுமன்றங்கள் ஒப்புதல் தர வேண்டும். அனைத்து துறைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பை அனைத்து அரசாங்கங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.

இதில் நாடாளுமன்றத்தின் பணி கடினமானது, சவாலானது. ஏனெனில் AI மூலம் ஏற்படும் சிக்கல்கள், நாட்டின் நெறிமுறைகள், தனியுரிமை, வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட பலவற்றுடன் தொடர்புடையது. ஜனநாயகத்தின் முன் வைக்கப்படும் சவால்கள் பன்முகத்தன்மை கொண்டவை.  AI நமக்கு முன்வைக்கும் ஒரு முக்கியமான சவால், இது வேலையின்மைக்கு வழிவகுக்கும். மேலும் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடும். எனவே, நாம் கட்டமைக்கும் ஒழுங்குமுறைகள், வேலைவாய்ப்பை பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும். தேவைப்படும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

AI பயன்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும், AI-க்கான கொள்கைகளை வரையறுத்தல் வேண்டும். AI-ன் பல்வேறு அம்சங்களைப் பற்றிய ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கான அமைப்புகளை நிறுவும்படி நாடாளுமன்றங்கள் அதனதன் அரசுகளை வலியுறுத்த வேண்டும்.

AI தொடர்பான எந்தவொரு சட்டத்தையும் இயற்றும் முன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வரைவுச் சட்டத்தை உருவாக்கி, பொதுமக்கள், துறை வல்லுநர்கள், தொழில்துறையினர், மனித உரிமை அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், குழந்தைகள் உரிமை அமைப்புகள் என பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை செய்ய வேண்டும்.

வடிவமைப்பு, மேம்பாடு, சரிபார்த்தல், வரிசைப்படுத்தல், கண்காணிப்பு மற்றும் சுத்திகரிப்பு கால தணிக்கை என ஒவ்வொரு கட்டத்திலும், நாம் வகுக்கும் AI-ன் கொள்கைகள் பொருந்தும் என்பதை AI மீதான சட்டம் உறுதி செய்ய வேண்டும்”.

இவ்வாறு எம்பி பி.வில்சன் தெரிவித்தார்.


source https://news7tamil.live/ai-technology-risks-losing-millions-of-jobs-speech-by-mp-b-wilson-in-uruguay.html

வச்சாத்தி வழக்கு : உண்மையான சந்தன கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில் அரசு செயல்பட்டதாக தீர்ப்பில் நீதிபதி குற்றச்சாட்டு

 

வச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உண்மையான சந்தன கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில் அப்போதைய அரசு செயல்பட்டுள்ளது என நீதிபதி வேல்முருகன் தீர்ப்புகளை வாசித்துள்ளார்.

29 09 2023

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நீதிபதி P.வேல்முருகன் தீர்ப்பு விவரம் பின்வருமாறு..

உண்மையான சந்தன கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில், அப்போதைய அரசின் உதவியுடன் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் வாச்சாத்தியில் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். பழங்குடியின பெண்களை பாதுகாக்க அப்போதைய அரசு அக்கறை காட்டவில்லை. மாறாக தவறிழைத்த அதிகாரிகளை பாதுகாக்கவே முற்பட்டுள்ளது.

இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, கிராமத்தினரின் சொத்துக்கள், கால்நடைகள், கோழிகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றது ஆகியவை அதிகாரிகளின் அலுவலக பணியல்ல. அதனால் வழக்கு தொடர்வதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

வாச்சாத்தி பகுதியில் சில முக்கிய நபர்கள் சந்தன கடத்தலில் ஈடுபட்ட நிலையில், அப்பாவி கிராம மக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வனத்துறை எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை.

காவல்துறை, வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மிரட்டல் காரணமாகவே 18 பெண்களும் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை நீதிபதியிடம் கூறவில்லை. 13 வயது சிறுமி, 8 மாத நிறைமாத கர்ப்பிணி ஆகியோரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கும் நிலையில், பொய் குற்றச்சாட்டை கிராமத்தினர் கூறி இருக்கிறார்கள் என்ற அரசு அதிகாரிகள் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது.

சந்தன கட்டைகளை தேடுவதற்காக 18 பெண்களை அழைத்துச் சென்ற போது, பெண் காவலர் இருந்தும் அவரை உடன் அழைத்துச் செல்லவில்லை என்பதிலிருந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களின் உள்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. உண்மை குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் கூட மாவட்ட ஆட்சியரோ, மாவட்ட வன அதிகாரியோ, காவல் கண்காணிப்பாளரோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளை பாதுகாத்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட இளம் அப்பாவி பழங்குடியின பெண்களின் வலியை பணத்தினாலோ வேலை வாய்ப்பு வழங்குவதினால் ஈடுகட்டிவிட முடியாது. சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்ட நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது, மேல்முறையீட்டு வழக்குகள் தள்ளுபடி செய்துள்ளார்.

source https://news7tamil.live/vachathi-case-the-judge-accused-the-government-of-acting-to-protect-the-real-sandalwood-smugglers.html

2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாள்!

 

30 09 2023 

2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாள்!

2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாள். ரிசர்வ் வங்கி கொடுத்த கெடு முடிவடைவடைகிறது. 

நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19ம் தேதி உத்தரவிட்டது

அத்துடன் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30 ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. பல்வேறு அரசு துறை நிறுவனங்களும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 28ம் தேதிக்கு பிறகு வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டன.

இதேபோல் செப்டம்பர் 28-ம் தேதிக்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் பேருந்துகளில் டிக்கெட் வாங்க கொடுத்தால், அதை வாங்க வேண்டாம் என நடத்துனர்களுக்கு தமிழக அரசின் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது

ஆம்னி பேருந்துகளில் 2,000 நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இதனிடையே ரிசர்வ் வங்கியின் வெளியிட்ட அறிவிப்பின் படி, கடந்த ஆகஸ்ட் 31 நிலவரப்படி ரூ.0.24 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்து வந்தது

புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.32 லட்சம் கோடி ஆகும். அதாவது, 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறும் அறிவிப்பு வெளியான மே 19-ம் தேதியில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 93% நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

source https://news7tamil.live/today-is-the-last-day-to-exchange-rs-2000-notes.html

வங்கி ஆண்டறிக்கையில் கோட்சே படம்: காங்கிரஸ் எதிர்ப்பு

 Nathuram Godse

தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது கூட, மகாத்மா காந்தி காலாவதியானவர் என்று சதாவர்தே வெளிப்படையாக கோட்சேவைப் புகழ்ந்தார்.

Maharashtra: மகாராஷ்டிரா ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் கூட்டுறவு வங்கி லிமிடெட் தனது ஆண்டறிக்கையில் நாதுராம் கோட்சேவின் புகைப்படத்தை வெளியிட்டதை அடுத்து, வழக்கறிஞர் குணரத்னா சதாவர்தேவை கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அரசுப் போக்குவரத்துக் கூட்டுறவு வங்கித் தேர்தலில் சதாவர்தே தலைமையிலான அரசுப் போக்குவரத்துக் கஷ்டகாரி ஜனசங்கக் குழு 19 இடங்களிலும் ஏற்கெனவே உள்ள தொழிற்சங்கங்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றது. தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது கூட, மகாத்மா காந்தி காலாவதியானவர் என்று சதாவர்தே வெளிப்படையாக கோட்சேவைப் புகழ்ந்தார்.

அட்டைப் பக்கத்தில் சதாவர்தே குழு உறுப்பினர்கள் கோட்சே, வி டி சாவர்க்கர் மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படத்தை ஏந்திய புகைப்படம் உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் லோண்டே, “சதாவர்தே ஒரு வழக்கறிஞராக இருக்க வேண்டும், ஆனால் மாநிலத்தில் சமூக சூழலைக் கெடுக்க தொடர்ந்து ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

மகாத்மா காந்திக்கு எதிராக அவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார், அவரை காலாவதியானவர் என்று குறிப்பிடுகிறார். பாஜக ஆட்சி அமையும் போதெல்லாம் சதாவர்தே போன்றவர்கள் பலம் பெறுகிறார்கள். உள்துறை அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸை கைது செய்து, மகாராஷ்டிராவில் சட்டம் நடைமுறையில் இருப்பதைக் காட்ட நாங்கள் தைரியம் தருகிறோம்” என்றார்.

மேலும், “சதாவர்தே மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வாடெட்டிவார் கேள்வி எழுப்பினார். ஆளும் பாஜக அவருக்கு ஆதரவளிப்பது தெளிவாகத் தெரிகிறது. அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கான முக்கியமான வங்கி, இவரைப் போன்ற ஊழல் நபர்களால் சிக்கலை எதிர்கொள்கிறது” என்றார்.


source https://tamil.indianexpress.com/india/congress-demands-arrest-of-labour-union-leader-over-publication-of-godses-photo-1425407

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

வறண்டது மேட்டூர் அணை! கலக்கத்தில் டெல்டா விவசாயிகள்!

 

மேட்டூர் அணை வறண்டதால் அணைப்பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயம், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ ஆலய கோபுரம் வெளியே தெரிகிறது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை சற்று தனிந்ததன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37 அடி அடியாக குறைந்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் குறையும் பொழுது அங்கு உள்ள புராதன சின்னங்கள் வெளியே தெரிவது வழக்கம்.

தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 37 அடி அடி மட்டுமே உள்ளதால், இந்தப் புராதன சின்னங்கள் முழுமையாக வெளியே தெரிகிறது. இதன்படி ஜலகண்டேஸ்வரர் ஆலய நந்தி சிலையும் கோபுரமும் வெளியே தெரிகின்றன. அதேபோல கிறிஸ்தவ ஆலய கோபுரமும் தற்போது வெளியே தெரிகிறது.

இதே நிலை தொடர்ந்தால் நீரின்றி விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவதோடு, விளைநிலங்கள் தரிசாகும் நிலைக்கு தள்ளப்படும் என டெல்டா பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கான நீரை உடனடியாக பெற மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



source https://news7tamil.live/mettur-dam-is-dry-delta-farmers-in-turmoil.html

வழக்கின் தீர்ப்பை மாற்ற வேண்டும் என தொடர் மிரட்டல் : பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை நீதிபதி!

 

குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பை மாற்றுமாறு கொடுத்த தொடர் அழுத்தம் மற்றும் மிரட்டல் காரணமாக இலங்கை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறினார்.

குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டு வந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதி பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :

குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பை மாற்றுமாறு தொடர்ச்சியாக அரசு தரப்பால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும், பாராளுமன்ற வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தனர்.

அண்மையில் எனக்கான (நீதிபதிக்கான) போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை, புலனாய்வு துறையினர் தொடர்ச்சியாக என்னை கண்காணித்து வந்தனர்.
சட்டமா அதிபர், என்னை (முல்லைத்தீவு நீதிபதியை) தனது அலுவலகத்தில் கடந்த 21ஆம் தேதி சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்ற உத்தரவுகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் கொடுத்தார்.

குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புப்படுத்தி எனக்கு (முல்லைத்தீவு நீதிபதிக்கு) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ( Court of Appeal) எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதி பதவியை  துறந்துள்ளேன்.

இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த 23-09-2023 அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று அவர்  தெரிவித்தார்.  தன்னுடைய பதவி விலகலை அறிவித்த பின்னர் அவர்  நாட்டை விட்டு வெளியேறியுள்ளது தெரியவந்துள்ளது.

source https://news7tamil.live/intimidation-to-change-the-judgment-of-the-case-sri-lankan-mullaitivu-district-judge-who-resigned-and-left-the-country.html

தி.மு.க வாக்குறுதி அளித்த ஐந்தரை லட்சம் அரசு வேலை குறித்த வாக்குறுதி அப்படியே தான் உள்ளது.அன்புமணி விமர்சனம்

 ff

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

தி.மு.க வாக்குறுதி அளித்த ஐந்தரை லட்சம் அரசு வேலை  குறித்த வாக்குறுதி அப்படியே தான்  உள்ளது. அதை நிறைவேற்றுவதை நோக்கி ஓரடி கூட எடுத்து வைக்கப்படவில்லை என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாட்டில் தி.மு.க அரசு அமைந்த பிறகு கடந்த இரு  ஆண்டுகளில் 12,576 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும்,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 10,205 பேருக்கு நேற்று பணி ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும்,  அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள்  வழங்கப்பட இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார். 

தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களில் கடந்த இரு ஆண்டுகளில் வழங்கப்பட்டதாக கூறப்படும் அரசு வேலைகளின் எண்ணிக்கையும்,  அடுத்த இரு ஆண்டுகளில் வழங்கப்படவிருப்பதாக கூறப்படும் தமிழக அரசு வேலைகளின்  எண்ணிக்கையும் போதுமானவை அல்ல.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 22,781 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது.  ஒப்பீட்டளவில் தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததை விட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை  குறைந்திருக்கிறது. இது சாதனை அல்ல.

தமிழ்நாட்டில் அனைத்து அரசுத் துறைகளிலும் சேர்த்து 4 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலியிடங்களால் அவற்றின் செயல்பாடுகள்  பாதிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.  நடப்பாண்டில்,  6553 இடைநிலை ஆசிரியர்கள், 3587 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 10,140 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தும் இதுவரை ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிக்கை கூட இன்னும் வெளியிடப்படாததால் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகக் கூட அவர்கள் நியமிக்கப்பட வாய்ப்பில்லை.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள்  உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில்  வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.  ஆனால், புதிதாக  ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் கூட இன்னும் நிரப்பப்படவில்லை.  எந்தத் துறையிலும் புதிய பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை. அந்த வகையில் தி.மு.க வாக்குறுதி அளித்த ஐந்தரை லட்சம் அரசு வேலை  குறித்த வாக்குறுதி அப்படியே தான்  உள்ளது. அதை நிறைவேற்றுவதை நோக்கி ஓரடி கூட எடுத்து வைக்கப்படவில்லை.

பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களும், தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களும் பத்தாண்டுகளைக் கடந்தும் இன்னும் பணி நிலைப்பு செய்யப்படவில்லை. அதை விட ஆபத்தான போக்காக அனைத்து அரசுத் துறைகளிலும்  தனியார் நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தொழிலாளர்கள் உரிமைக்கு எதிரானது என்பதைக் கடந்து அரசுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டையும், பொறுப்புடைமையையும் கடுமையாக பாதிக்கும்.

சென்னையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியவாறு “அரசாங்க வேலைக்கு இருக்கின்ற மவுசு, எந்தக் காலத்திலும் குறையாது. போட்டித் தேர்வுகளில்  தேர்வு பெற்று,  எப்படியாவது ஒரு அரசுப் பணியை வாங்கிவிட வேண்டும் என்பது, படித்த இளைஞர்களுடைய ஒரு பெரிய கனவு” என்பது மிகவும் உண்மை. தமிழ்நாட்டு இளைஞர்களின் இந்தக் கனவை நனவாக்கும் கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. அதற்கான நடவடிக்கைகளை அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/anbumani-ramadoss-criticize-dmk-government-on-govt-jobs-data-1414763

கன்னட அமைப்புகள் பந்த்: 144 தடை- பெங்களூருவில் பதற்றம்

 

Cauvery Water Dispute

2,000க்கும் மேற்பட்ட கன்னட ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்துள்ள கர்நாடகா பந்த் காரணமாக பெங்களூருவில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 Cauvery Water Dispute- Karnataka Bandh: கர்நாடகா பந்த் காரணமாக பெங்களூருவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக காவல்துறை துணை ஆணையர் தயானந்தா வியாழக்கிழமை (செப்.28) அறிவித்துள்ளார்.

முன்னதாக, கர்நாடகாவில் உள்ள பள்ளிகளின் அசோசியேட்டட் மேனேஜ்மென்ட்ஸ் (KAMS) கர்நாடக பந்த்க்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், “வெள்ளிக்கிழமை கர்நாடக பந்த் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறையை தீர்மானிக்கும் மாவட்டத்தின் நிலைமையை மதிப்பீடு செய்ய அந்தந்த மாவட்டங்களின் துணை ஆணையர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அந்தந்த பகுதியின் சூழ்நிலையின் அடிப்படையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதை பள்ளி நிர்வாகத்தின் விருப்பத்திற்கே விட்டு விடுகிறோம்” என்று கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது எனக் கோரி, 2,000க்கும் மேற்பட்ட கன்னட ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்துள்ள கர்நாடகா பந்த் காரணமாக பெங்களூருவில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 29) நள்ளிரவு 12 மணி முதல் இந்த கட்டுப்பாடு தொடங்கும் என்று போலீஸ் கமிஷனர் பி தயானந்த் தெரிவித்தார்.

இதற்கிடையில், கன்னட அமைப்புகளுக்கான ஒருங்கிணைந்த அமைப்பான ‘கன்னட ஒக்குடா’, போலீஸ் நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டத்தின் ஒரு பகுதியாக டவுன்ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை கண்டன ஊர்வலம் நடைபெறும்.

இதற்கிடையில், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு கர்நாடகாவுக்கு தமிழகத்துக்கு வியாழக்கிழமை முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை வழங்கிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் சித்த ராமையா புதன்கிழமை தெரிவித்தார்.

அதே நாளில், திட்டமிடப்பட்ட ஆய்வுப் பணிகளுக்காக, கெங்கேரியிலிருந்து சல்லகட்டா வரை (நம்ம மெட்ரோவின் ஊதாப் பாதையின் ஒரு பகுதி) புதிதாகக் கட்டப்பட்ட விரிவாக்கத்தில் மைசூர் சாலை மற்றும் கெங்கேரி நிலையங்களுக்கு இடையே மெட்ரோ சேவைகள் நிறுத்தப்படும்.

இருப்பினும், பையப்பனஹள்ளி மற்றும் மைசூர் சாலை, ஒயிட்ஃபீல்டு மற்றும் கே ஆர் புரம் நிலையங்கள் மற்றும் முழு பசுமைப் பாதையிலும் ரயில் சேவைகள் இருக்கும்.

144 தடை உத்தரவு

பெங்களூரு போலீசார் 144 தடை உத்தரவு விதித்துள்ள நிலையில் பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

பேருந்துகள் ஓடும்

இதற்கிடையில், வெள்ளிக்கிழமை கர்நாடக பந்த் இருந்தபோதிலும் BMTC இன் அனைத்து வழித்தடங்களும் வழக்கம் போல் இயங்கும் என்று பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம் வியாழக்கிழமை அறிவித்தது.

ஆட்டோ ரிக்ஷா ஓடாது

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்துக்கு ஆதரவாக கர்நாடக ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர்கள் சங்கத்தின் (ARDU) அவசர அலுவலகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த பந்த்க்கு ஆதரவளிக்குமாறு அனைத்து ஓட்டுனர்களின் சகோதர சகோதரிகளுக்கும் ARDU அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

source https://tamil.indianexpress.com/india/all-schools-and-colleges-to-remain-shut-tomorrow-due-to-karnataka-bandh-1413294

வியாழன், 28 செப்டம்பர், 2023

பென்னு சிறுகோளில் சேகரிக்கப்பட்ட கல், மண் மாதிரி: நாசா சாதனை!

 

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பூமியிலிருந்து சுமாா் 200 கோடி கி.மீ. தொலைவில் உள்ள ‘பென்னு எனப்படும் சிறுகோளில் இருந்து கல் மற்றும் மண் மாதிரிகளைச் சேகரித்து வெற்றிகரமாக பூமிக்கு கொண்டு சாதனை படைத்துள்ளது.

சூரிய குடும்பத்தில் 1.31 லட்சம் சிறுகோள்கள் விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சிறுகோள்கள் பூமியின் மீது மோதக்கூடிய ஆபத்து அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

அந்த வகையில் அடுத்த 300 ஆண்டுகளில் பூமியின் மீது பென்னு சிறுகோள் மோதக்கூடிய வாய்ப்பு அதிக அளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பென்னு சிறுகோளை ஆய்வு செய்தால் சூரிய குடும்பத்தின் தோற்றம், கோள்களின் தோற்றம், பூமியில் உயிா்கள் வாழ்வதற்கு வழிவகுத்த உயிரினங்கள் மற்றும் தண்ணீரின் தோற்றம் குறித்து அரிய அறிவியல் உண்மைகள் தெரியவரலாம் என்பதால் பென்னு சிறுகோளிலிருந்து கல் மற்றும் மண் மாதிரிகளைச் சேகரிக்க நாசா முடிவு செய்தது.

இதனைடுத்து, ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் 2016, செப். 8-ஆம் தேதி பென்னுவை நோக்கி அனுப்பப்பட்டது.2020, அக். 20-ஆம் தேதி சிறுகோளின் தரைப்பரப்பிலிருந்து கல் மற்றும் மண் மாதிரிகளை ஒரு கொள்கலனில் விண்கலம் சேகரித்தது.

பின்னர் பூமியை நோக்கி ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலத்தின் பயணம் 2021, மே 10-இல் தொடங்கியது. அங்கிருந்து பூமியின் வளிமண்டலத்தை நோக்கி மணிக்கு 44,500 கி.மீ. வேகத்தில் விரைந்து வந்தது கொள்கலன்.

பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த 13-ஆவது நிமிஷத்தில் அமெரிக்காவின் உட்டா மாகாண பாலைவனப் பகுதியில் தரையிறங்கியது. அங்கிருந்து தற்காலிக ஆய்வறைக்கு கல் மற்றும் மண் மாதிரிகள் அடங்கிய கொள்கலனை நாசா விஞ்ஞானிகள் கொண்டுசென்றனா. பின்னா, ஹெலிகாப்டா் மூலம் அந்தக் கொள்கலன் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

source https://news7tamil.live/rock-soil-samples-collected-on-asteroid-bennu-nasa-feat.html

பீகார் பள்ளிகளில் சுமார் 3 லட்சம் மாணவர்களின் பெயர் நீக்கம்: வெளியான அதிர்ச்சித் தகவல்!

 

பீகாரில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெயர்களை அந்த மாநில கல்வித்துறை நீக்கியுள்ளது.

கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.கே.பதக்கின் உத்தரவின்பேரில், நீண்ட காலமாக வராத மாணவர்களின் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, அவர் மாநிலம் முழுவதும் குழுக்களை அனுப்பி, பள்ளிகளை ஆய்வு செய்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை தினசரி கண்காணித்து வந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் பள்ளிக்கு வராதது குறித்து பெற்றோர் சரியான காரணத்தை கடிதம் மூலம் சமர்ப்பிக்குமாறு கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. பலர் பதில் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், சுமார் 3,32,000 பேரின் பெற்றோர் எந்த பதிலும் அளிக்காததால் கல்வித்துறை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

எந்த ஒரு மாணவரும் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு மேல் பள்ளிக்கு விடுப்பு எடுக்கக் கூடாது, அவ்வாறு தவறினால், சரியான காரணங்களை பள்ளி நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



source https://news7tamil.live/bihar-education-department-disenroll-over-3-lakh-students-for-missing-school.html

தமிழ்நாட்டிற்கு மறுக்கப்படும் புதிய மருத்துவக் கல்லூரிகள் – காரணம் என்ன?

 

தமிழ்நாட்டிற்கு  புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் புள்ளி விபரங்கள் என்ன சொல்கிறது என்பதை விரிவாக காண்போம்.

இந்தியாவில் மொத்தமாக  650 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகள் மூலம் 99,163 மருத்துவக் கல்வி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2023 ஜனவரி மாதம் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி மொத்தமாக 71 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

அவற்றில்  37 அரசு மருத்துவக் கல்லூரிகள் 24 தனியார் மருத்துவக் கல்லூரிகள்  என  71 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) அனுமதியுடன் இயங்கி வருகின்றன.  37 அரசு மருத்துவக்  கல்லூரிகளில் 5,225 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில், தமிழ்நாட்டைப் போல ஒன்றரை மடங்கு அதிக பரப்பளவு உள்ள மாநிலங்களை விட இங்குதான் அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 11 ஆயிரம் மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மூலம் மருத்துவக் கல்வி நிறைவு செய்து வெளியே வருகின்றனர்.

அதே போல நமது நாட்டில் உள்ள டாப் 5 மருத்துவக் கல்லூரிகளைப் பட்டியலிட்டால், அதிலும் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டின் 71 மருத்துவக் கல்லூரிகளில் தலா 153 இடங்கள் என்ற அளவில், 11,000-க்கும் அதிக மருத்துவக் கல்வி இடங்கள் இருக்கின்றன. 67 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு 10,945 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது கர்நாடகா.

தேசிய மருத்துவ ஆணையம் இந்தியாவில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவராவது இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 600 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கின்றனர். இதன் மூலம் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான நோயாளிகள் ஒவ்வொரு வருடமும்  சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார்கள். அதே போல தமிழ்நாட்டில் இருந்து திறமையான மருத்துவர்கள் எய்ம்ஸ் மருத்துமனைகள் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் பணி செய்கிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் தமிழ்நாட்டில் ஏற்கனவே கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் இருப்பதால் மேலும் கல்லூரிகள் தேவை இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே போல இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவில் விமான நிலையங்கள் உள்ளன. இதனால் ஒசூரில் புதிய விமான நிலையத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி கேட்ட போது தமி்ழ்நாட்டில் போதுமான விமானநிலையங்கள் உள்ளன. அதனால் மேலும் விமான நிலையங்கள் கேட்க வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/new-medical-colleges-denied-to-tamil-nadu-what-do-the-statistics-say.html

தொடரும் கலவரம் – மணிப்பூர் பதற்றமான மாநிலமாக அறிவிப்பு..!

 27 09 2023

மணிப்பூரில் தொடரும் கலவரத்தால் மணிப்பூர் பதற்றமான மாநிலமாக அறிவித்து அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது. இதனைத் தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் வராததால் மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது.

இதனிடையே குகி பழங்கியினத்தை சார்ந்த இரண்டு பெண்கள்  நிர்வாணப்படுத்தப்படடு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கு உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டது.

குற்றவாளிகளை ஆஜர்படுத்துதல், தடுப்புக்காவல், நீதிமன்றக் காவல் மற்றும் நீட்டிப்பு தொடர்பான நீதித்துறை நடைமுறைகளை மணிப்பூரில் நடத்தாமல் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் இணைய வழியில் நடத்தப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

மணிப்பூரில் வன்முறை சற்று தணிந்த நிலையில், தற்போது மீண்டும் கலவரம் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றது. அதன்படி, கங்குய் பகுதியில் உள்ள இரெங் மற்றும் கரம் வைபேய் கிராமங்களுக்கு இடையே செப்டம்பர் முதல் வாரம் மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் அடையாளம் தெரியாத நபர்கள் பொதுமக்கள் மூவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

செப்டம்பர் 8 அன்று தெங்னௌபல் மாவட்டத்தில் உள்ள பல்லேல் என்ற இடத்தில் மூவர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில்  வன்முறை தொடர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அந்த மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் 19 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகள் பதற்றம் நிறைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிலை அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள்  சட்டத்தின்படி (AFSPA ) என்பது இந்திய ஆயுதப் படைகள் மற்றும் மாநில மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு “பதற்றமான பகுதிகள்” என வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிறப்பு அதிகாரங்களை வழங்கும் சட்டத்தினை அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த புதிய அறிவிப்பு  அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/continuity-of-riots-manipur-declared-as-a-state-of-tension.html