நிறைய வேலைகள் இருக்கும் போது, சாமியார் மீது புகார் கொடுப்பது, உருவ பொம்மைகளை எரிப்பது போன்ற நேரத்தை வீணடிக்கும் வேலைகளில் தொண்டர்கள் ஈடுபட வேண்டாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டின் போது சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து உத்தரப்பிரதேசத்தைச் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி தலையை கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் நேற்று முன்தினம் உதயநிதியின் தலையை யாரும் சீவவில்லை என்றால் நானே சீவுவேன். அதற்காக வாள் ஒன்றையும் தயாரித்துள்ளேன். உதயநிதி தலையை வெட்ட ரூ.10 கோடி போதாது எனில் அந்த தொகையை உயர்த்தவும் தயார் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியதாவது:நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக இதுபோன்ற அவதூறுகளை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். பிரதமரும் பாஜக கட்சியினரும் சனாதன தந்திரத்தைப் பயன்படுத்தி மக்களை கவனத்தைத் திசை திருப்புகின்றனர்.
என் தலையின் விலையை விட எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், எல்லாவற்றையும் துறந்ததாகக் கூறும் ஒருவரால் எப்படி 10 கோடி ரூபாய் இருக்கும். இது தவிர, நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் எனக்கு எதிராக பலர் புகார் அளித்து வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கொலைமிரட்டல் விடுத்த சாமியார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தும், அவரது உருவபொம்மை, உருவப்படங்களை எரித்தும், கண்டனம் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டியும் திமுக கட்சியினர் புகார் அளித்து வருகின்றனர். மற்றவர்களுக்கு கண்ணியம் கற்பிப்பது நாம்தான். அதைத்தான் நம் தலைவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
எனவே இது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி, ஏராளமான இயக்கப் பணிகளும், மக்கள் பணிகளும் நமக்காகக் காத்திருக்கின்றன. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இதுபோன்ற நிறைய வேலைகள் இருக்கும் போது, சாமியார் மீது புகார் கொடுப்பது, அவரது உருவ பொம்மைகளை எரிப்பது போன்ற நமது நேரத்தை வீணடிக்கும் வேலைகளில் நமது தொண்டர்கள் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திமுக கட்சித் தலைவரின் வழிகாட்டுதலுடனும், கட்சி மேலிடத்தின் ஆலோசனையின்படியும் சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சந்தர்ப்பத்தில், சனாதன மாநாட்டை அழித்தொழித்ததற்கும், அதனை தேசிய அளவில் பேசுபொருளாக விளங்குவதற்கும் இதை ஏற்பாடு செய்த TNPWAA தோழர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் மாநாட்டில் கலந்து கொள்ள காரணமாக இருந்த புதுகை பூபாலம் பிரகதீஸ்வரனுக்கு என் நன்றிகள். பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியரின் சித்தாந்தத்தின் வெற்றிக்காக பாடுபட உறுதி ஏற்போம்.”
இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
source https://news7tamil.live/dont-engage-in-time-wasting-activities-like-suing-the-preacher-burning-effigies-i-will-face-the-cases-according-to-law-udhayanidhi.html