வெள்ளி, 1 செப்டம்பர், 2023

மும்பையில் நடைபெற்ற INDIA கூட்டணியின் மூன்றாவது கூட்டம்! 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்பு!

 

மும்பையில் நடைபெற்ற INDIA கூட்டணியின் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்ற முதல் நாள் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து INDIA என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன.

பீகார், பெங்களூரு எதிர்கட்சிக் கூட்டத்தை தொடர்ந்து இந்த கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக்கூட்டம் இன்றும் நாளையும் மும்பையில் நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியில் 26 கட்சிகள் உள்ள நிலையில், 3வது ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் 2 கட்சிகள் இணையும் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மும்பையில் INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் முதல் நாள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை கூடியது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம் குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இதன்தொடர்ச்சியாக நாளை காலை 2-வது நாளாக கூட்டம் நடைபெறவுள்ளது. நாளை நடைபெறும் ஆலோசனையின்போது, இந்தியா கூட்டணியின் இலச்சினை வெளியிடப்பட உள்ளது.


source https://news7tamil.live/third-meeting-of-india-alliance-held-in-mumbai-63-leaders-from-28-parties-participated.html