சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் உள்ள கான்கேர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஒரு பெரிய என்கவுன்டர் நடந்தது, இதில் 18 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர். ஏப்ரல் 19 ஆம் தேதி பஸ்தாரில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மாவட்டத்தில் 60,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பஸ்தாரின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுந்தர்ராஜ் பி. தெரிவித்துள்ளார்.
"குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் அடிப்படையில், பி.எஸ்.எஃப் (BSF) (COB Chotebetiya) மற்றும் DRG குழுக்களின் கூட்டு நடவடிக்கை ஏப்ரல் 16 அன்று தொடங்கப்பட்டது... இந்த நடவடிக்கை இன்னும் முன்னேற்றத்தில் இருக்கும் போது, பாதுகாப்பு படைகள், சி.பி.ஐ (CPI) மாவோயிஸ்ட் குழுக்களிடமிருந்து துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டது. அவர்களுக்கு BSF வீரர்கள் திறம்பட பதிலடி கொடுத்தனர். BSF வீரர் ஒருவரின் காலில் தோட்டா காயம் ஏற்பட்டது, தோட்டா வெளியேற்றப்பட்ட பிறகு அவர் ஆபத்தில் இல்லை,” என BSF செய்தித் தொடர்பாளர் கூறினார்,
"ஆபரேஷன் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, இப்போது வரை, சுட்டுக்கொல்லப்பட்ட 18 சி.பி.ஐ மாவோயிஸ்ட் வீரர்களின் உடல்கள்... சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன" என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, இந்த என்கவுண்டர் சோட்டபெட்டியா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது. ஏழு ஏ.கே ரக துப்பாக்கிகள் மற்றும் மூன்று லைட் மெஷின் கன்களும் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
என்கவுன்டரில் மூன்று பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர், ஆனால் அவர்கள் ஆபத்தில் இல்லை என்று அதிகாரி கூறினார்.
காங்கர் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி, மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது, சோட்டபெட்டியா காவல் நிலைய எல்லையில் வாக்குச் சாவடியை அமைப்பதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் குழுவை அழைத்துச் சென்ற எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) ஜவான் ஒருவர் IED குண்டுவெடிப்பில் காயமடைந்தார். ஒரு நாள் கழித்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த குண்டுவெடிப்பில் இரண்டு வாக்குச்சாவடி அதிகாரிகளும் காயம் அடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை, உள்துறை அமைச்சர் அமித் ஷா சத்தீஸ்கரில் உள்ள கைராகர்க்கு பயணம் செய்தார், அங்கு அவர் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார், அடுத்த மூன்று ஆண்டுகளில் நக்சலிசத்தை ஒழிப்போம் என்று உறுதியளித்தார்.
பாதுகாப்புப் படையினர் இந்த ஆண்டு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர், 2024ல் இதுவரை 50 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த ஆண்டு மாவோயிஸ்ட் வன்முறையில் 18 பொதுமக்களும், ஆறு பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளனர்.
source https://tamil.indianexpress.com/india/18-maoists-killed-in-bastar-encounter-3-days-ahead-of-lok-sabha-polls-4486193