செவ்வாய், 16 ஏப்ரல், 2024

இந்திய ஜனநாயகத்தை அழிக்க முடியாது” – நெய்வேலியில் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை!

 


source https://news7tamil.live/even-if-100-modis-come-indian-democracy-cannot-be-destroyed-mallikarjuna-karke-lobbying-in-neyveli.html

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பும், ஜனநாயகமும் காக்கப்படும் எனவும், 100 மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தை அழிக்க முடியாது எனவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நெய்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் ஆகிய இருவரையும் ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திடலில் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

பொதுக் கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் தமிழ்நாடு மக்கள் மனதில் நிலைத்து உள்ளனர். பாஜக அரசு தமிழக அரசுக்கு வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும் உரிய நிதி வழங்காமல் வஞ்சித்து வருகிறது. மத்திய பாஜக அரசு மக்கள் நலத்திட்டங்கள், பட்ஜெட் உள்ளிட்ட அனைத்திலும் ஆளுநரை வைத்து தொடர்ந்து தமிழக அரசுக்கு இடையூறு செய்கிறது.

53 ஆண்டுகளில் நான் எம்எல்ஏ, எம்பி என பல பதவிகளை வகித்த நிலையிலும் இது போன்று ஒரு ஆளுநரை பார்த்ததில்லை. பாஜக அரசின் செயல்களுக்கு முடிவு கட்ட இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு, கருப்பு பணத்தை கொண்டு வந்து மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்பது உள்ளிட்டவற்றை கூறினார்கள். ஆனால் எதுவும் செய்யவில்லை. மோடி ஒரு பொய்யர்.

பரப்புரை மேடையில் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றியபோது

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு எல்லாம் ஜிஎஸ்டி வரி போடப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தபால் நிலையம் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள 30 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். நீட் தேர்வில் மாநில அரசின் பரிசீலனையை ஏற்று பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பும், ஜனநாயகமும் காக்கப்படும். 100 மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தை அழிக்க முடியாது”

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.