செவ்வாய், 16 ஏப்ரல், 2024

தேர்தல் பத்திரம்: குற்றப் பின்னணி கொண்ட 3 நிறுவன

 தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15 ஆம் தேதி ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி மற்றும் நிதியை கொடுத்தவர்களின் விவரங்களை வெளியிடவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு அதிரடி உத்தரவு போட்டது. 

இந்த உத்தரவின்படி, தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி வழங்கியது. இதைத் தொடர்ந்து, எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்நிலையில், அரசியல் கடசிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த நிறுவனங்கள் பற்றி அலசிய ஆராயப்பட்டு வருகிறது.  நன்கொடை அளித்த நிறுவனங்களுக்கும், நன்கொடை வாங்கிய கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன என்பது குறித்த விரிவான விளக்க கட்டுரைகள் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழில் வெளியிடப்பட்டு வருகிறது. 

3 நிறுவனத்திடம் இருந்து  ரூ.23 கோடி பெற்ற டி.எம்.சி

இந்த நிலையில், சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டவர் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் ராஜ்யசபா எம்.பி ஸ்ரீஞ்சோய் போஸ். இவரது குடும்பத்துடன் தொடர்புடைய 3 நிறுவனங்கள், மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு (டி.எம்.சி), 14 தவணைகளில் ரூ.23.30 கோடி தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக அளித்துள்ளன. ஜூலை 2021 முதல் ரூ. 1 முதல் 3 கோடி வரை மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வழங்கியுள்ளது. 

கடந்த மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு செய்த தரவுகளின்படி, 2021 சட்டமன்றத் தேர்தலில் டி.எம்.சி வெற்றி பெற்று அந்த ஆண்டு மே மாதம் மாநில அரசாங்கத்தை அமைத்தவுடன் இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ன. 

* ஜூலை 2021 மற்றும் ஜூலை 2023 க்கு இடையில், இந்த நிறுவனங்களில் ஒன்றான ரிப்லி & கோ ஸ்டீவடோரிங் & ஹேண்ட்லிங் பிரைவேட் லிமிடெட், 7 தவணைகளில் டி.எம்.சி கட்சிக்கு ரூ.11.50 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக வழங்கியது. தனித்தனியாக, அதன் இயக்குனர்களில் ஒருவரான பிரசாந்த் குமார் ஜெய்ஸ்வால், அக்டோபர் 2023 முதல் இரண்டு தவணைகளில் ரூ.4.30 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வழங்கி இருக்கிறார். 

* ஜனவரி 2022 இல், திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் ராஜ்யசபா எம்.பி ஸ்ரீஞ்சோய் போஸ் குடும்பத்திற்குச் சொந்தமான இரண்டாவது நிறுவனமான நெடின்கான் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட், டி.எம்.சி கட்சிக்கு ரூ.3 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக வழங்கியது. இந்த நிறுவனம் 2021-22ல் ரூ.22.30 லட்சம் நிகர லாபம் ஈட்டியதாக பதிவுகள் காட்டுகின்றன.

* மூன்றாவது நிறுவனமான ஆரோ ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், அக்டோபர் 2022 மற்றும் ஜூலை 2023 க்கு இடையில் நான்கு தவணைகளில் ரூ. 4.5 கோடி திப்பிலான தேர்தல் பத்திரங்களை டிஎம்சிக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறது. 2021-22ல் நிறுவனம் ரூ.20.19 லட்சத்தை நிகர லாபம் ஈட்டியதாக சமீபத்திய பதிவுகள் காட்டுகின்றன.

ஏப்ரல் 2019 முதல் இந்த நிறுவனங்கள் எதுவும் டி.எம்.சி தவிர மற்ற கட்சிகளுக்கு பத்திரங்களில் நன்கொடை அளித்ததற்கான பதிவுகள் எதுவும் இல்லை.

நிறுவனங்களின் பதிவாளர் (RoC) பதிவுகளின்படி, ஸ்ரீஞ்சாய் போஸ் 2010 இல் ரிப்லியின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார் மற்றும் 2014 இல் தனது தாயார் சம்பா போஸுக்கு தனது 49 சதவீத பங்கை மாற்றியுள்ளார். நிறுவனத்தில் நிரந்தர ஊழியராக இருந்து அவர் ஆண்டுக்கு 1.80 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீஞ்சோயின் சகோதரர் ஷௌமிக் போஸ் (43%), சம்பா போஸ் ரைசிங் சன் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் (RSHPL) அறக்கட்டளை (40%) மற்றும் பிரசாந்த் ஜெய்ஸ்வால் (1.66%) ஆகியோர் ரிப்லேயில் 85 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். மீதமுள்ள 15.34 சதவீதத்தை எனர்ஜி இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட், ஐக்கிய அரபு எமிரேட்சை அலுவலகமாக கொண்ட நிறுவனம் வைத்துள்ளது.

நெடின்கான் மார்க்கெட்டிங்கில், ஸ்ரீஞ்சோய் தனது மனைவி ராய் போஸுடன் 49.5 சதவீத பங்கையும், அவரது சகோதரர் ஷௌமிக் 50.5 சதவீத பங்கையும் வைத்துள்ளார். ஏரோ ஆரோ ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் அதன் முகவரி மற்றும் இயக்குநர்களை நெடின்கான் மார்க்கெட்டிங் உடன் பகிர்ந்து கொள்கிறது.

இதுகுறித்து கேட்க தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டபோது, ​​ஸ்ரீஞ்சாய் போஸ் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். மேலும், ஜெய்ஸ்வால் மற்றும் சௌமிக் போஸ் கருத்து தெரிவிக்க கிடைக்கவில்லை.

ஸ்ரீஞ்சோய் 2011 இல் டி.எம்.சி-யின் ராஜ்யசபா எம்.பி.யானார். நவம்பர் 2014 இல், சாரதா குழுமம் சம்பந்தப்பட்ட போன்சி ஊழல் தொடர்பாக குற்றவியல் சதி, நிதி முறைகேடு மற்றும் தேவையற்ற நிதி ஆதாயங்களைப் பெற்றதற்காக சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டார். பிப்ரவரி 2015 இல், அவர் ஜாமீனில் வெளிவந்த ஒரு நாளுக்குப் பிறகு, அவர் ராஜ்யசபா மற்றும் டி.எம்.சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். 

2014ல் கைது செய்யப்படுவதற்கு முன், ஸ்ரீஞ்சோய், டி.எம்.சி கட்சிக்கு ஆதரவான 'ஜாகோ பங்களா'வின் ஆசிரியராக இருந்தார். சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் டி.எம்.சி எம்பி குணால் கோஷ் ஆலோசனை ஆசிரியராக இருக்கும் ஒரு முக்கிய பெங்காலி பத்திரிகையான ‘சங்பாத் பிரதிடின்’ உரிமையாளராகவும், எடிட்டாகவும் இருக்கிறார்.

டிசம்பர் 2021 வரை, ஸ்ரீன்ஜாய் மோஹுன் பாகன் கால்பந்து கிளப் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனராகவும் இருந்தார். இது அவரது தந்தையும் முன்னாள் டி.எம்.சி ராஜ்யசபா எம்.பி-யுமான ஸ்வபன் சதன் ‘டுட்டு’ போஸ் தலைமையிலான மோகன் பாகன் கிளப்பின் கால்பந்து நடவடிக்கைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.

கொல்கத்தாவில் 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ரிப்லி & கோ ஸ்டீவடோரிங் & ஹேண்ட்லிங், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 7 துணை நிறுவனங்களுடன் பல்வேறு துறைமுகங்களில் ஏற்றுதல் மற்றும் வர்த்தகத்தில் முதன்மையாக ஈடுபட்டுள்ளது. 2021-22ல் ரூ.121.14 கோடியும், 2022-23ல் ரூ.135.75 கோடியும் நிகர லாபம் ஈட்டியுள்ளது.

2006 இல் பிரசாந்த் ஜெய்ஸ்வால் (2%) உடன் ஸ்ரிஞ்சோய் மற்றும் ஷௌமிக் ஆகியோர் நிறுவனத்தில் தலா 49 சதவீத பங்குகளை வைத்திருந்ததாக நிறுவனங்களின் பதிவாளர் தரவில் கிடைத்த முந்தைய பதிவுகள் காட்டுகின்றன. ஸ்ரீஞ்சோய் மார்ச் 2003 இல் இயக்குனராக நியமிக்கப்பட்டு மார்ச் 2010 இல் ராஜினாமா செய்தார்.

2014 ஆம் ஆண்டு வரை ரிப்லியின் 98 சதவீத பங்குகளை போஸ் சகோதரர்கள் தங்கள் தாயார் சம்பாவுக்கு மாற்றினர். டிசம்பர் 2015 இல், ரிப்லி ஒரு வெளிநாட்டு நிறுவனமான - எனர்ஜி இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் - துபாய் போஸ்ட் பாக்ஸ் முகவரியுடன் 15 சதவீத பங்குகளை ரூ.36.93 கோடிக்கு வழங்கியது.

2020 இல், சம்பா தனது 83 சதவீத பங்குகளில் 43 சதவீதத்தை ஏப்ரல் 2018 இல் ரிப்லியில் இயக்குநராக ஆன தனது இளைய மகன் ஷௌமிக்கிற்கு மாற்றினார். 2021 இல் சம்பா இறந்ததிலிருந்து, அவரது மீதமுள்ள 40 சதவீத பங்குகள் சம்பா போஸ் ரைசிங் சன் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் அறக்கட்டளைக்கு உள்ளது. .

பிரசாந்த் ஜெய்ஸ்வால் 2000 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் நிறுவனர் உறுப்பினராக இருந்தார். அவர் டிசம்பர் 2012 இல் இயக்குனராக இருந்து விலகினார் மற்றும் செப்டம்பர் 2014 இல் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

2006 இல் நிறுவப்பட்டது, நெடின்கான் மார்க்கெட்டிங் மொத்த வர்த்தகம் மற்றும் போக்குவரத்து மற்றும் சேமிப்பு சேவைகளில் ஈடுபட்டுள்ளது. ஆரோ ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன்  2009 இல் இணைக்கப்பட்டது மற்றும் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் சேமிப்பு போன்ற சேவைகளை வழங்குகிறது.


source https://tamil.indianexpress.com/india/electoral-bonds-tmc-got-rs-23-crore-from-3-firms-linked-to-ex-mp-and-saradha-accused-tamil-news-4482632