source https://news7tamil.live/nota-pushed-back-independent-candidates-in-tamil-nadu.html
தமிழ்நாட்டில் சுயேட்சையாக போட்டியிட்ட வாக்காளர்களில் பெரும்பான்மையினரை பின்னுக்கு தள்ளி நோட்டா அதிக வாக்குகளை பெற்று பெரும்பாலான தொகுதிகளில் 5வது இடத்தை பிடித்துள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. அதே நேரம் அதன் கூட்டணி கட்சியான பாமக தருமபுரி தொகுதியில் முன்னிலையில் இருந்தது. இந்த முன்னிலை நிலவரமும் இப்போது வரை மாறி மாறி வருகிறது. அனைத்து தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.
அதிமுகவை பொறுத்தவரை போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் வரவில்லை. ஒட்டமொத்தமாக கட்சிகள் அல்லாதவர்கள் தமிழகத்தில் 21% வாக்குகள் வாங்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் இதர கட்சிகள் வாக்கு சதவீதத்துடன் நாதக வாக்கு சதவீதமும் அடங்கும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சுயேட்சை வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்றுள்ளது. இதில் திண்டுக்கல் தொகுதியில் அதிகபட்சமாக நோட்டாவில் 17495 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை நோட்டாவில் 299448 வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் நோட்டா பெரும்பான்மையான தொகுதிகளில் 5வது இடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை என தெரியவருகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் பீகாரில் மட்டும் 8,16,950 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி இருந்தது. தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 7,25,097 வாக்குகள் நோட்டாவில் பதிவாகியுள்ளது. மூன்றாவது அதிகபட்சமாகத் தமிழ்நாட்டில் 5,50,577 வாக்குகள் நோட்டாவுக்காக பதிவாகி இருந்தது. நோட்டா இந்த முறை எத்தனை பேரின் வெற்றி தோல்வியைப் புரட்டிப் போடப் போகிறது என்பது தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு தான் தெரியவரும்.